வழிமாறிய சிறுவன்... தேடி அலைந்த பெற்றோர்... ‛வாட்டர் கேன்’ வாலிபரால் இணைந்த உருக்கமான நிகழ்வு
தனது வீட்டிலிருந்து வழி தவறி குன்றத்தூரில் சிறுவன் தவித்துக் கொண்டிருக்க, காணாமல் அவரது பெற்றோர் ஒருபுறம் தேடிக்கொண்டிருக்க, வாட்டர் கேன் சப்ளை செய்யும் வாலிபரால் அந்த சிறுவன் பெற்றோரிடத்தில் சென்றடைந்த உருக்கமான சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் தனது வீட்டில் இருந்து வழி தவறி வந்த சிறுவனை உரிய நேரத்தில் பத்திரமாக மீட்டு அவருடைய பெற்றோரிடம் சேர்க்க உதவிய ‛வாட்டர் கேன்’ வினியோகம் செய்யும் இளைஞர் தான் இப்போது பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார். சென்னையை அடுத்த குன்றத்தூர் பஸ் நிலையத்தில் நின்ற அரசு பேருந்தில் உள்ளாடை மட்டும் அணிந்த சிறுவன் ஒருவர் அமர்ந்து கொண்டு, நான் பீச்சுக்கு போக வேண்டும் என்று நடத்துனரிடம் டிக்கெட் கேட்டுள்ளார். அதைக் கண்ட பேருந்தின் நடத்துனர் அந்த சிறுவனுடன் யாரும் இல்லாததால் சந்தேகம் அடைந்து உடனடியாக அந்த சிறுவனை பேருந்தில் இருந்து கீழே இறக்கி அழைத்து சென்று அருகில் இருந்த போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதனையடுத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் அந்த சிறுவன் யார் ? எங்கிருந்து வந்தான் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த சிறுவன் தனது தாயின் பெயர் திவ்யா என்று மட்டும் கூறியுள்ளான். மேலும் தான் சென்னை கடற்கரையில் இருப்பதாகவும் , தன்னை அங்கு அழைத்துச் செல்லுமாறும் அந்த சிறுவன் போலீசாரிடம் கூறியுள்ளான். அங்கு குடியிருந்த மக்களும் போலீசாரும் எவ்வளவு கேட்டும் வீட்டு முகவரியை சொல்ல அந்த சிறுவனால் முடியவில்லை. இந்நிலையில் அந்த வழியாக வீடுகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நபர் ஒருவர் அங்கு வந்தார். ‛அந்த சிறுவனை தான் பார்த்துள்ளதாக அவர் கூறியதுடன், சிறுவனின் வீடு இருக்கும் பகுதியும் தெரியும்,’ என கூறினார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறுவன் அங்கிருப்பது தெரியாமல், பிள்ளை காணவில்லையே என பெற்றோர் அவர்கள் வசிக்கும் பகுதியில் தேடி அலைந்துள்ளனர்.
போலீசார் அந்த சிறுவனை அவரது வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குள் பெற்றோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். காணாமல் தேடிய குழந்தை கிடைத்த மகிழ்ச்சியில் சிறுவனை கட்டி அழுதனர். வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த போது யாருக்கும் தெரியாமல் வீட்டில் இருந்து சிறுவன் இறங்கி நடந்து வந்ததாகவும், சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் காலில் செருப்பு அணியாமல் அந்த சிறுவன் சுட்டெரிக்கும் வெயிலில் வீட்டில் இருந்து நடந்து வந்தது அதன் பிறகு தெரியவந்தது. இதனையடுத்து வீடுகளுக்கு தண்ணீர் கேன் போடும் நபர், உரிய நேரத்தில் அந்த சிறுவனை அடையாளம் கண்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க உதவிய சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெற்றோர்களின் கவனக்குறைவால் சிறுவர்கள் பலர் இதுபோன்று காணாமல் போகும் பல சம்பவங்கள் தினமும் அரங்கேறுவதை நம்மால் பார்க்கமுடிகிறது. இந்த நிலையில் நாடு தற்போது சந்தித்து வரும் இந்த இக்கட்டான சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை மிகவும் கவனமாக கண்காணித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு குன்றத்தூரில் நடத்த நிகழ்வு ஒரு சான்றாக அமைத்துள்ளது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகள் மீது கூடுதல் கவனத்துடன் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

