புதுப்பொலிவுடன் தாவரவியல் பூங்கா திறப்பு ! புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளுக்கு கொண்டாட்டம்!
புதுச்சேரி தாவரவியல் பூங்கா புது தோற்றத்தில் 9.11 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று திறக்கப்பட்டது.

புதுச்சேரி: புதுச்சேரி தாவரவியல் பூங்கா புது தோற்றத்தில் 9.11 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு செய்யப்பட்டதை இன்று முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
புதுச்சேரி தாவரவியல் பூங்கா
புதுச்சேரியின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான தாவரவியல் பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முழுமையாக புனரமைக்கப்பட்டு இன்று பொதுமக்களுக்குத் திறக்கப்படுகிறது.
சுமார் 9.11 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்ட இந்தப் புனரமைப்பு பணிகளை, புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி இன்று மதியம் 12 மணிக்கு திறந்து வைத்தார்.
பழமையான பூங்கா – புதிய தோற்றம்
மறைமலை அடிகள் சாலையில் அமைந்துள்ள இந்த தாவரவியல் பூங்கா, புதுச்சேரியின் பழமையான சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். சுமார் 22 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இப்பூங்காவில் 3,500-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. சுற்றுச்சூழல் பசுமையை காக்கும் முக்கிய மையமாகவும் இது விளங்குகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தொடங்கி இந்த பூங்காவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் நீடித்ததனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பூங்கா பொதுமக்களுக்கு மூடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் மக்களும் ஏமாற்றமடைந்தனர்.
கடந்த பிப்ரவரி மாதம், பூங்கா திறக்கப்படாமலேயே மலர் கண்காட்சி நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது அதிகாரிகள், “பணிகள் 90 சதவீதம் மட்டுமே நிறைவு பெற்றுள்ளன” என்று தெரிவித்திருந்தனர். தற்போது அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவு பெற்றுள்ளன.
புதிய வசதிகள் – நவீன முகம்புனரமைப்பின் மூலம் தாவரவியல் பூங்கா முழுமையான நவீன வசதிகளுடன் புதிய தோற்றத்தை பெற்றுள்ளது.
இதில் அடங்கியுள்ளவை:
புதுப்பிக்கப்பட்ட நுழைவு வாயில் மற்றும் டிக்கெட் கவுன்ட்டர்கள்
புதிய கழிப்பறைகள் மற்றும் சுகாதார வசதிகள்
சுற்றுச்சூழலுக்கேற்ப வடிவமைக்கப்பட்ட ஜாக்கிங் டிராக்
கண்ணை கவரும் கண்ணாடி மாளிகை (Glass House)
புதுப்பிக்கப்பட்ட ஆம்பி தியேட்டர்
இளைஞர்களுக்காக செல்பி பாயிண்ட் வழிகாட்டி
வரைபடங்களுடன் கூடிய சைகைப் பலகைகள்
சிறுவர்களுக்கான பேட்டரி ரயில் வசதி
மூத்த குடிமக்களுக்கான பேட்டரி கார் சேவை
பாரம்பரிய கைவினைப் பொருட்களை பிரதிபலிக்கும் குடில்கள் (Traditional Huts)
மக்களின் உற்சாகம் இரண்டு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பின் இன்று பூங்கா திறக்கப்படுவதால், உள்ளூர் மக்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் உள்ளனர். பசுமை சூழலில் குடும்பத்துடன் நேரத்தை கழிக்க விரும்புவோருக்கு இது மீண்டும் ஒரு சிறந்த தளமாக அமைய உள்ளது.





















