Boiler explosion: கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்
கடலூர் சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்து 4 பேர் பலி, 20 பேர் படுகாயம் கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி, 20 பேர் படுகாயம்
கடலூர் சிதம்பரம் சாலையில் உள்ள சிப்காட் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்த விபத்தில் 4 பேர் பலி, 20 பேர் படுகாயமடைந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதி
கடலூர் சிப்காட்டில் கிரீம்சன் என்ற பூச்சிக்கொல்லி ரசாயனம் தயாரிக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது. ஷிப்ட் அடிப்படையில் ஆலைக்கு தொழிலாளர்கள் பணிக்கு வந்து செல்கின்றனர், அந்த வகையில் இன்று காலை 6 மணி ஷிப்ட் தொடங்கிய சிறிது நேரத்தில், ஆலையின் இரண்டாவது தளத்தில் இருந்த பாய்லர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியிருக்கிறது.
காலைப்பணியில் 100க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது, அதில் நிகழ்விடத்திலேயே 4 பேர் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தனர்,20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதனிடையே பாய்லர் வெடித்ததால் சிப்காட் பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நச்சுப் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறி மயக்கம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், மேலும் ரசாயன கசிவு காரணமாக அப்பகுதியில் பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
தீ விபத்து குறித்து அறிந்தவுடன் நிகழ்விடத்திற்கு சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, சிப்காட், என அடிக்கடி பாய்லர் வெடிப்பு நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இது குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தினால் வரும் காலத்தில் உயிரிழப்புகளையும், விபத்துக்களையும் தவிர்க்கலாம் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது .
ஏற்கனவே கொரோனா தொற்றாளர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு மருத்துவமனைகள் நிரம்பியிருக்கும் நிலையில் இது போன்ற அவசர விபத்துக்கள் நடக்கும் போது அவர்களை அனுமதிப்பதில் சில சிக்கல்கள் இருப்பதாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.