Annamalai: '500 கோடியும் வழங்க முடியாது.. மன்னிப்பும் கேட்க முடியாது..' - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை பதில் நோட்டீஸ்..!
திமுக அரசின் அமைச்சர்கள் குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மை என்று அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்ம என்றும் அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 14 ஆம் தேதி, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை நிருபர்களைச் சந்தித்து தி.மு.க. சொத்துப் பட்டியல் அதாவது ’DMK Files’ என்ற தலைப்பில் தகவல்களை வெளியிட்டிருந்தார். அண்ணாமலையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தன் மீது அவதூறு பரப்பியதாக அமைச்சர் உதயநிதிஸ்டாலின் சார்பில் ரூ.50 கோடி இழப்பீடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அண்ணாமலை 48 மணிநேரத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்
அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் மன்னிப்பு கேட்க கோரியும், ரூ, 500 கோடி இழப்பீடு கேட்டும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதற்கு அண்ணாமலை தரப்பில் இருந்து இன்று பதில் அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை தரப்பில் இருந்து திமுக குறித்த அண்ணாமலையின் கருத்து மற்றும் குற்றச்சாட்டு உண்மையே. ஆர்.எஸ்.பாரதி கேட்ட ரூ.500 கோடியை வழங்க முடியாது. ஏனெனில், இழப்பீடு தரும்படி சட்டத்திலும் இடமில்லை என்று பதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு, டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுகவினரின் அடிப்படை ஊழல்களை ஆதாரங்களுடன் அண்ணாமலை வெளிகொண்டு வந்திருக்கிறார் என்றும் அவரது தரப்பில் வழக்கறிஞர் பால் கனகராஜ் மூலம் பதில் அளிக்கப்பட்டுள்ளது.