அடுத்த ஸ்கெட்ச் முதல்வர் ஸ்டாலினுக்கா? சிபிஐக்கு துப்பு கொடுக்கிறாரா அண்ணாமலை? பரபரப்பு பேட்டி!
திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி என்பது ஊர்ஜிதமாகி உள்ளது என்று பா.ஜ.க. மாநில தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரையில் தனியார் ஓட்டலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் வீடியோவில் வரம்பு மீறி பேசியுள்ளார். கனிமொழி கைதுக்கு கூட ஸ்டாலின் இந்த அளவுக்கு கோபப்படவில்லை. இதன்மூலம் திமுகவின் கருவூலம் செந்தில் பாலாஜி என்பது ஊர்ஜிதமாகி உள்ளது. கைதுக்கு பின்னர் ஒரு முதலமைச்சர் போல ஸ்டாலின் நடந்து கொள்ளவில்லை. சபரீசனுக்கும் அரசு நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என முதலமைச்சர் சொல்லும்போது, பின் அவர் எதற்காக செந்தில் பாலாஜியை பார்க்க மருத்துவமனைக்கு வந்தார்?
பாஜக தொண்டர்களை முதலமைச்சர் நேரடியாக மிரட்டி உள்ளார். நாங்கள் எதற்கும் தயாராக தான் உள்ளோம்.
திமுக குண்டர்கள் வீதிக்கு வருவது தமிழகத்துக்கு புதிது அல்ல, இப்போது பாஜக தொண்டர்களை குறிவைத்து களம் இறங்குகிறார்கள். முதல்வருக்கு பதில் சவால் விடுகிறேன். பாஜக தொண்டர் மீது கை வைத்து பாருங்கள். நிலைமை கை மீறினால் கோட்டைக்கு வருவோம். நீங்கள் கொடுத்தால் திருப்பி கொடுப்போம். நாங்கள் பழைய பாஜக அல்ல. ஊழல் செய்யும் அமைச்சர் மீது கோபம் காட்டாமல் பாஜக தொண்டர்கள் மீது கோபத்தை காட்டுவது என்ன நியாயம்?
டி.ஆர்.பாலு என்மீது தொடர்ந்த அவதூறு வழக்கில் உரிய ஆவணத்துடன் நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன். மனித உரிமை ஆணைய தலைவரை கட்சி தலைவராக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்தியாவில் எதிர்கட்சிகள் இணைந்தால் பாஜகவுக்கு லாபம் தான். எனவே எதிர்கட்சிகள் இணைவை பார்த்து பாஜக பயப்படவில்லை. எதிர்கட்சிகள் இணைவு என்பது கானல் நீர் தான். எதிர்கட்சிகள் இணைவது நடக்கவே நடக்காது. தமிழகம், புதுவையில் 40 இடங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
அமலாக்கத்துறை கையால் எழுதி நோட்டீஸ் ஒட்டலாம். அவசர நிலையில் அதை செய்யலாம். சென்னை மெட்ரோ வழக்கை சி.பி.ஐ விசாரித்தால் முதலமைச்சர் சிறை செல்வது உறுதி" என தெரிவித்துள்ளார்.