’கொழுந்தியா பெண்ணுக்கு வளைகாப்பு’- நிதியமைச்சர் பிடிஆருக்கு அண்ணாமலை கண்டனம்
"ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் என் செல்லவில்லை? என் கொளுந்தியா பொண்னுக்கு வளைகாப்பு. அதனால் போகவில்லை என்கிறார். இது தான் நிதியமைச்சர் கொடுக்கும் பதிலா?"
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாற்று கட்சியினர் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைந்தனர். இதனைத் தொடர்ந்து அண்னாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”கோவையில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு மக்கள் சேவைகள் நடைபெற்று வருகின்றன. கோவை மாநகர காவல்துறை திமுகவின் கூலிப் படையாக இருந்து பிரதமர் மோடியின் பிறந்தநாள் போஸ்டரை கிழித்ததற்கு பாஜகவின் கண்டனத்தை பதிவு செய்கிறோம்.
நீட் தேர்வு தொடர்பாக மாணவர்கள் உயிரிழக்கும் நிலை இருப்பதற்கு பாஜக மிகவும் வருத்தப்படுகிறது. நீட் என்பது சமூக நீதியை நிலை நாட்ட கூடிய தேர்வாக உள்ளது. அரசியல் காரணங்களுக்காக திமுக நீட் தேர்வை தவறாக பயன்படுத்துகிறது. 2021இல் மட்டும் ஏன் இத்தனை மாணவர்கள் உயிரிழக்க வேண்டும்? நீட் தேர்வு வராது என திமுக உறுதி அளித்தது தான் மாணவர்கள் உயிரிழப்புகளுக்கு காரணம். இவ்விவகாரத்தில் ஆளும் அரசு பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், நீட் தேர்வில் மட்டும் அல்லாமல் மற்ற படிப்புகளிலும் முறைகேடு நடக்கின்றன. முறைகேடுகளை அரசு கண்காணித்து தடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் பாஜகவின் தற்போதைய கூட்டணி சுமூகமாக செல்கிறது. 22 ஆம் தேதிக்குள் தேர்தலில் போட்டியிடும் இடங்கள் முடிவு செய்யப்படும். தேர்தலில் வலுவான வேட்பாளர்களை போட்டியிட வைப்போம்” எனத் தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் சார்பாக வேட்பாளர்கள் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு, ”மக்களுக்கு நல்லது நினைப்பவர்களும், நல்லது செய்ய நினைப்பவர்களும் யாராக இருந்தாலும் வரலாம்” என அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டுமென பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு நிதியமைச்சர் என் செல்லவில்லை? என் கொளுந்தியா பொண்ணுக்கு வளைகாப்பு. அதனால் போகவில்லை என்கிறார். இது தான் நிதியமைச்சர் கொடுக்கும் பதிலா? . எதிர் கட்சியாக இருந்த போது ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டுமென்ற திமுக இப்போது எதிர்க்கிறது. திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக பேசுவது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர மாநில அரசுகள் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர ஒப்புதல் கொடுக்க வேண்டும். 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலை ஏன் இரண்டு கட்டங்களாக நடத்த வேண்டும்? ஒரே தேதியில் நடத்த வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட காரணம் முக்கியமானது தான். அதில் எந்த தவறும் இல்லை. நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
மாதம் ஒரு முன்னாள் அமைச்சர் என வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்துவதற்கு, திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம். லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளின் விசாரணை நேர்மையாக இருக்கும் என நம்புகிறோம். அதிகாரிகள் நேர்மையாக விசாரணை மேற்கொள்வார்கள். குற்றம்சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகளாக வெளியே வருவார்கள் என நம்புகிறோம். சமூக நீதி காவலர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தலைவர்களை பற்றி தவறாக பேசுவது எங்களுடைய டிஎன்ஏலேயே இல்லை” என அவர் தெரிவித்தார்.