Annamalai: “தமிழகத்தில் பாஜக வளர்ந்ததுக்கு காரணங்கள் இரண்டு; அதில் ஜெயலலிதா மறைவும் ஒன்று” - அண்ணாமலை
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா விட்டுச்சென்ற வெற்றிடத்தை பாஜக நிரப்பும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை டெல்லியில் தெரிவித்துள்ளார்.
தென் மாநிலத்தின் 3வது பெரிய கட்சியாக பாரதிய ஜனதா கட்சி அமையும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கான மக்களவை தேர்தல் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்ட தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தற்போது வரை 429 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் 6ம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த, 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தேர்தல் ஆணைய அறிவிப்பின்படி, பீகாரைச் சேர்ந்த 8 தொகுதிகள், ஹரியானவைச் சேர்ந்த 10 தொகுதிகள், ஜம்மு & காஷ்மீரைச் சேர்ந்த 1 தொகுதி, ஜார்கண்டைச் சேர்ந்த 4 தொகுதிகள், டெல்லியைச் சேர்ந்த 7 தொகுதிகள், ஒடிசாவைச் சேர்ந்த 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 14 தொகுதிகள், மற்றும் மேற்குவங்கத்தச் சேர்ந்த 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் நேற்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், “ முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெற்றிடத்தை பாஜக நிரப்பி வருகிறது. இந்த தேர்தலில் இரட்டை எண்ணில் வாக்கு பங்கு நிச்சயம் பாஜகவிற்கு கிடைக்கும். 3வது பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். அதிமுக ஹிந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் செல்வதால் பாஜகவிற்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
2014-ம் ஆண்டுக்கு முன்புவரை ஒரு இந்து வாக்காளரின் இயல்பான தேர்வு அ.தி.மு.க.வாகத்தான் இருந்தது. ஜெயலலிதா தனது இந்து அடையாளத்தை வெளிப்படையாக காட்டினார். அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கும், மதமாற்ற தடைச்சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த முதல் அரசியல் தலைவர் அவர்தான்.
தமிழ்நாட்டில் கோயில்களை காக்கும் கட்சியினை மக்கள் தேடுகின்றனர். அது பாஜகவாக தான் இருக்கும். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக ஹிந்துத்துவா சித்தாந்தத்தில் இருந்து விலகிச் சென்று விட்டது. 2014-ல் மோடி ஆட்சிக்கு வந்தது, ஜெயலலிதா மறைந்தது ஆகிய 2 காரணங்களால்தான் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.