கரூரில் புதிய தடுப்பணை கட்டி ஊழல் செய்த திமுக கவுன்சிலர் குடும்பத்தினர் - அண்ணாமலை
சேரர் - சோழர் ஆட்சி காலத்தில் இரண்டு மன்னர்களும் இணையும் இடமாக கிருஷ்ணராயபுரம் தொகுதி இருந்தது. தமிழகத்தின் மைய பகுதியாகவும் இருந்து வருகிறது.
நல்ல நிலையில் இருந்த தடுப்பணையை இடித்து கருங்கல்லை எடுத்துக்கொண்டு புதிய தடுப்பணை கட்டி ஊழல் செய்த திமுக கவுன்சிலர் குடும்பத்தினர் என அண்ணாமலை குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக பாஜகவின் என் மண் என் மக்கள் பாதை யாத்திரையில்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட உப்பிடமங்கலம் பேரூராட்சி பகுதியிலும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை பகுதியிலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பாதை யாத்திரை நடைபெற்றது. பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம், கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பாதை யாத்திரையில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி என்பது சிறப்பு வாய்ந்தது. சேரர் - சோழர் ஆட்சி காலத்தில் இரண்டு மன்னர்களும் இணையும் இடமாக கிருஷ்ணராயபுரம் தொகுதி இருந்தது. தமிழகத்தின் மைய பகுதியாகவும் இருந்து வருகிறது. இப்படி சிறப்பு வாய்ந்த தொகுதியில் தற்போது வரை பின்தங்கிய தொகுதியாகவே இருந்து வருகிறது. தரகம்பட்டி கீழப் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் மூன்று தடுப்பணைகளை கட்டுவதற்காக 30 லட்ச ரூபாய் ஒதுக்கி கருங்கற்களால் தடுப்பணைகள் கட்டி நன்றாக இருந்ததை, தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் திமுகவைச் சேர்ந்த கோமதி என்பவரின் கணவர் திமுக நிர்வாகி பிரபாகரன்நன்றாக இருந்த மூன்று கருங்கல்லால் ஆன தடுப்பணைகளை இடித்து அந்த கல்லை எடுத்துக் கொண்டு அவரது தோட்டத்தில் பண்ணை வீடு கட்டினார்.
மீண்டும் அதே இடத்தில் 36 லட்ச ரூபாய் ஒதுக்கி தற்போது அந்த இடத்தில் புதிய தடுப்பணை கட்டி வருகின்றனர். ஊழலின் உச்சம், எப்படி இந்த தொகுதி வளர்ச்சி இருக்கும்” என்றார். இதேபோல், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தோகைமலை பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் பேசினார். கலைஞரின் முதல் தொகுதி குளித்தலை அப்போது வாக்குறுதி கொடுத்து குடகனாறு மூலமாக தோகமலை பகுதிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று கூறினார். தற்போது வரை அதை செய்யவில்லை. அவரது மகன் ஸ்டாலின் அதேபோல் கடந்த தேர்தலில் 513 வாக்குறுதியில் 20 சதவீதம் கூட செய்து முடிக்கவில்லை என அண்ணாமலை குற்றச்சாட்டி பேசினார்.