மேலும் அறிய
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு ; பாஜக நிர்வாகி கைது... விழுப்புரத்தில் பரபரப்பு
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய பாஜக நிர்வாகி கைது.

பாஜக நிர்வாகி கைது
Source : Whatsapp
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அரசூர் அருகே ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை பார்க்க சென்ற திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய நபர் கைது, தலைமறைவாக இருந்து வந்த நபரை இரண்டரை மாதங்களுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 31ஆம் தேதி ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த போது வரலாறு காணாத மழை பெய்ததில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளும், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விலை நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கி ஏராளமான பொதுமக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக அரசூர் அருகே உள்ள இருவேல்பட்டு கிராமத்தில் வெள்ளத்தில் வீடுகள் மூழ்கி 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இருவேல்பட்டு கிராமத்திற்கு கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் தேதி திமுக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்கள், தங்களின் நிலையை எடுத்துக் கூறி உதவிடுமாறு கோரிக்கை வைத்த போது அமைச்சர் பொன்முடி நக்கலடித்து ஏளனமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி ஆகியோரின் மீது சேற்றை வீசியெறிந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் திமுகவினரை, பொதுமக்களிடம் இருந்து மீட்டு பாதுகாப்பாக போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசியெறிந்ததாக இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் பாஜக நிர்வாகி விஜயராணி உள்ளிட்ட 2 பேர் மீது திருவெண்ணைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையறிந்ததும் ராமகிருஷ்ணன் மற்றும் விஜயராணி ஆகியோர் தலைமறைவானார்கள்.
தலைமறைவான இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இரண்டரை மாதங்களுக்கு பிறகு திமுக அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வீசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த ராமகிருஷ்ணனை திருவெண்ணைநல்லூர் போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்து வரும் பாஜக நிர்வாகியான விஜயராணியை தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















