CDS Bipin Rawat Death | உயிரிழந்தார் தலைமை தளபதி பிபின் ராவத் - விமானப் படை அறிவிப்பு
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவது முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இல்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில், அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்த நிலையில், காட்டேரி என்ற இடத்தில் திடீரென விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த நிலையில் பல்வேறு நபர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் உயிரிழந்தனர். ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.
இதுகுறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள ட்வீட்டில், ’’துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர். கேப்டன் வருண் சிங், படுகாயங்களுடன் வெலிங்டன் ராணுவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
With deep regret, it has now been ascertained that Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and 11 other persons on board have died in the unfortunate accident.
— Indian Air Force (@IAF_MCC) December 8, 2021
முன்னதாக நிலைமை குறித்து நீலகிரி ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். மேலும், மீட்புப் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய இன்று மாலை 6 மணிக்குத் தனி விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் கோவை செல்கிறார். அங்கிருந்து குன்னூர் சென்று, விபத்து நடந்த பகுதியை நேரில் பார்வையிட உள்ளார். அவருடன் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, முதல்வரின் உதவியாளர் உதயச்சந்திரன், ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் உடன் செல்கின்றனர்.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து தொடர்பான சூழலைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மூத்த பாதுகாப்புத் துறை உயரதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே விபத்து தொடர்பாகப் பிரதமருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளதாகவும் இதுதொடர்பாக அவசர ஆலோசனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்தை அடுத்து, ராணுவத்தின் 15 பேர் கொண்ட குழு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டம் முடிந்த நிலையில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் விபத்து குறித்து நாடாளுமன்றத்தில் நாளை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.