பாரதிய ஜனதாவா? திராவிட ஜனதாவா? கொந்தளிக்கும் பிராமணர் சங்கம்..!
இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திராவிட இயக்கங்களின் முடிவை ஆதரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனையும், வானதி சீனிவாசனையும் கண்டிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் கொள்கை சித்தாந்தம் மாறி, திராவிட சிந்தாந்தத்திற்கு உடன்படுகிறதா? எனவும் அந்தணர் முன்னேற்றக் கழகம் கேள்வி எழுப்பியுள்ளது
தமிழகத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 34 ஆயிரம் கோயிகளில் வெறும் 4 ஆயிரம் கோயில்களில் மட்டுமே பிராமணர்கள் பூஜை செய்வதாகவும், மீதியுள்ள 30 ஆயிரம் கோயில்களிலும் வன்னியர், தேவேந்திரர், வேளாளர், முத்தரையர் உள்ளிட்ட பல்வேறு சமூகத்தினரும் பூஜைகள் செய்து வருகின்றனர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராவது என்பது மளிகை கடை பிஸினசா? என கேள்வி எழுப்பி உள்ள அந்தணர் முன்னேற்ற கழகத்தின் ஜெயப்பிரகாஷ், இந்து விரோத கட்சியான திமுக இந்த சட்டத்தை கொண்டு வருவதாகவும் பலநூற்றாண்டு காலமாக ஆகம விதிகளை பின்பற்றி பூஜைகள் நடத்தப்பட்டு வரப்படும் நிலையில் அதில் மாற்றம் கொண்டு வரக்கூடாது எனவும் கூறினார்.
கோயில்களில் ஆகம விதிகளின் அடிப்படையில் வழிபாடுகள் நடக்க வேண்டும் எனவும் ஆகம விதிகளின் அடிப்படையில்தான் அர்ச்சகர்கள் நியமனம் இருக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறி உள்ளதாக தெரிவித்த ஜெயப்பிரகாஷ், இஸ்லாமிய சமுதாயத்திலும் கிறிஸ்தவ சமுதாயத்திலும் பெண்களை உலமாக்களாகவும், போப்-ஆகவும் நியமிக்க முடியுமா? கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்து கோயில்களின் சொத்துகளை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்படுத்தி வரும் நிலையில் முஸ்லீம் சமய அறநிலையத்துறை, கிறிஸ்தவ சமய அறநிலையத்துறையை தமிழக அரசு கொண்டு வராதது ஏன்? கேள்வி எழுப்பிய அவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற நபர்கள் கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்ததை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
மேலும் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் தாங்கள் பெற்ற தீட்சையை நெருப்பில் போட்டு பொசுக்கியதாகவும், புனிதமான தீட்சையை நெருப்பில் பொசுக்கியவகள் மதச்சார்பு உடையவர்களாக பொறுப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள் எனவும் இந்து மதத்தில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கும் திராவிட இயக்கங்களின் முடிவை ஆதரிக்கும் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனையும், வானதி சீனிவாசனையும் கண்டிப்பதாகவும், பாரதிய ஜனதாவின் கொள்கை சித்தாந்தம் மாறி, திராவிட சிந்தாந்தத்திற்கு உடன்படுகிறதா? எனவும் அந்தணர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெயப்பிரகாஷ் கேள்வி எழுப்பியுள்ளார்