Bail vs Parole: பரோலுக்கும் ஜாமினுக்கும் என்ன வித்தியாசம்? ‛7 பேரும் கிட்டத்தட்ட விடுதலை’ என்கிறார் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்!
‛‛ஏழு பேரும் விடுதலை ஆக அனைத்து அம்சங்களும், உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது,’’
ராஜூவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 32 ஆண்டுகள் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. இதுவரை பரோலில் மட்டுமே சென்று வந்த அவருக்கு, தற்போது கிடைத்துள்ள ஜாமின் எந்த வகையில் உதவும், சட்ட ரீதியாக பரோல், ஜாமின் இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து, வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் ஏபிபி நாடு சார்பில் சிறப்பு பேட்டி எடுக்கப்பட்டது. இதோ அந்த பேட்டி...
கேள்வி: பரோலுக்கும், ஜாமினுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
பதில்: பரோல் என்பது அரசு வழங்கும் நடைமுறை. அது நாள் குறிப்பிடப்பட்ட நடவடிக்கை, ஒரு மாதம் வழங்கலாம். அதன் பின் மீண்டும் அதை நீட்டிக்கலாம், அல்லது நிராகரிக்கலாம். அது கட்டுப்பாடுகளை கொண்டது. போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் எதையும் செய்ய முடியாது. போலீஸ் பாதுகாப்போடு தான், எதையும் அணுக முடியும். கிட்டத்தட்ட சிறையில் இருப்பதைப் போன்றது தான் பரோல். வீட்டுச் சிறை. ஜாமின் என்பது, அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. எந்த போலீஸ் பந்தபஸ்தும் தேவையில்லை. ஜாமின் பெற்றவர் நினைத்த இடத்திற்கு செல்ல முடியும்.
கேள்வி: ஜாமின் பெற்ற பேரறிவாளன், இனி வழக்கு தொடர்பாக ஆஜராகவோ, சிறை செல்லவோ வாய்ப்பு உள்ளதா?
பதில்: இந்த வழக்கு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஏற்கனவே குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு, அதற்கான தண்டனையை அனுபவித்தவர் பேரளிவாளன். இனி வழக்கு விசாரணைக்கு வரப்போவதில்லை. எனவே வழக்கு தொடர்பான விவகாரங்களில் அவர் ஆஜராக வேண்டியதில்லை. கிட்டத்தட்ட விடுதலை ஆனதைப் போன்றது தான். வழக்கு முடிந்துவிடாது. நிலுவை வழக்கு என்று இருக்கும். அவ்வளவு தான், மற்றபடி விடுதலை ஆனது மாதிரி தான். இது அவர்களுக்கு பெரிய ரிலீப்.
கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, தமிழ்நாடு அரசின் விடுதலை தீர்மானத்திற்கு உதவுமா?
பதில்: 100 சதவீதம் உதவும். உச்சநீதிமன்றம் உத்தரவை வைத்து, தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை ஜனாதிபதி ஏன் ஏற்க முடியாது என்கிற கேள்வி வரும். ஜாமின் வழங்க கூறிய காரணங்களின் அடிப்படையில், அவரை வழக்கிலிருந்து விடுவிக்க தமிழ்நாடு எடுக்கும் முயற்சி பெரிய பலன் தரும்.
கேள்வி: பேரறிவாளனின் ஜாமின், இதே வழக்கில் உள்ள மற்ற 6 பேருக்கு உதவுமா?
பதில்: அவர்களும் ஜாமின் கேட்பார்கள். அவர்களுக்கும் அது சாதகமாக அமையும். ஒரே வழக்கில் ஒருவருக்கு ஜாமின் வழங்கப்பட்ட பிறகு, மற்றவர்களுக்கும் வழங்கி தான் ஆக வேண்டும். அவ்வாறு அவர்கள் ஜாமின் கேட்கும் போது, அது அவர்களுக்கு சாதகமாகவே அமையும். பேரறிவாளன் போன்றே, நளினியும் பரோலில் உள்ளார். அவரும் கேட்பார். ஒரு வழக்கை வைத்து, அதன் அடிப்படையில் அதே வழக்கை சார்ந்தவர்களும் ஜாமின், விடுதலை கேட்பது இயல்பானது. அதிலும் இது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு. அதை மேற்கோள் காட்டி எளிதில் ஜாமின் பெறலாம்.
கேள்வி: தமிழ்நாடு அரசு வழங்கிய பரோல் தான், ஜாமின் பெற காரணமா?
பதிலும்: அதுவும் ஒரு காரணம். பரோலில் அவர்கள் நன்னடத்தை சரியாக இருந்ததால் தான், அந்த பரோலை தமிழ்நாடு அரசு நீட்டித்தது. ஒரு வேளை அவர்கள் பரோலை நிராகரித்திருந்தாலோ, நீட்டிக்காமல் இருந்திருந்தாலோ, பேரறிவாளனின் நன்னடத்தை பற்றிய சந்தேகம் எழுந்திருக்கும். இப்போது, வழங்கப்பட்ட பரோலில் அவர் நன்னடத்தை சரியாக இருந்ததும், அவருக்கு ஜாமின் கிடைக்க ஒரு காரணமாக அமைந்தது.
கேள்வி: இந்த ஜாமின் உத்தரவு, எழுவர் விடுதலைக்கு வித்திடுமா?
பதில்: 100 சதவீதம் உதவும். அதற்கான அனைத்து அம்சங்களும் உச்சநீதிமன்ற உத்தரவில் உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்