High Court: குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பின்னர் பிறந்த குழந்தை.! அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்!
குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு பிறகு பிறந்த பெண் குழந்தையின் படிப்பு செலவை அரசே ஏற்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனம். இவருக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்த உடன், ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்துள்ளார். அதற்கான முறையான சான்றிதழும் மருத்துமனை நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பின்னரும் கர்ப்பம்
இந்த நிலையில் தனம் மீண்டும் கர்ப்பம் தரித்தார். அதனைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்தவர்கள் கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி அடைந்து விட்டதாக கூறி கடந்த 2017 ஆம் ஆண்டு அறிக்கை கொடுத்துள்ளனர்.
10 லட்சம் இழப்பீடு வழங்கக்கோரி மனு:
இந்த நிலையில், தனக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் வழங்க வேண்டும் என தனம் மனு அனுப்பினார். இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு தனத்திற்கு மூன்றாவதாகவும் பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனக்கு இழப்பீடாக தமிழக அரசு 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‘‘ மருத்துவர்களின் கவனக்குறைவால்தான் தனத்திற்கு 3-வது குழந்தை பிறந்துள்ளது. எனவே, அவருக்கு இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். 3-வது பெண் குழந்தைக்கு அரசு சலுகை கிடையாது. ஆகவே, அனைத்து சலுகைகளையும் வழங்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினார்.
உரிய நேரத்தில் வந்திருக்க வேண்டும் என தமிழக அரசு வாதம்
அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “ சில நேரங்களில் கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வியடைய வாய்ப்புள்ளது. இது மனுதாரருக்கு அறுவை சிகிச்சைக்கு முன்பே தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர், கர்ப்பமானது தெரிந்தவுடன் வந்திருந்தால் உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கும். அதனால் அவர் இழப்பீடு கோர முடியாது என்று கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அளித்த தீர்ப்பு பின்வருமாறு:-
மனுதாரர் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தபிறகு மீண்டும் கர்ப்பம் தரிக்காது என்று முழுமையாக நம்பியுள்ளார். இந்த விஷயத்தில் மருத்துவர்கள் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
மருத்துவர்களின் கவனக்குறைவு
3-வது பெண் குழந்தை பிறந்ததால், மனுதாரர் அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்கி, திருமணம் செய்துவைப்பது வரை பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும். மருத்துவர்களின் கவனக்குறைவுடன் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதால்தான் மனுதாரர் 3 வதாக பெண் குழந்தையை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மனுதாரர் மருத்துவமனையை உடனடியாக அணுகவில்லை என்பதை ஏற்க முடியாது.
2 பெண் குழந்தைகளுக்கு மட்டும் அரசு சலுகைகளை வழங்கி வரும் நிலையில், 3-வது குழந்தைக்கு எப்படி அரசின் சலுகையை பெற முடியும்? அதனால், அந்த குழந்தை தேவையில்லாத குழந்தையாகிவிடுகிறது.
தேசிய அளவில் செயல்படுத்தப்பட்டு வரும் குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை மனுதாரர் தானாக முன்வந்து தேர்வு செய்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார். அதனால், அவர் இழப்பீடு பெற தகுதியுள்ளவராக இந்த உயர்நீதிமன்றம் கருதுகிறது. அந்த குழந்தைக்கு 21 வயது ஆகும்வரை உரிய சலுகைகளை வழங்குவது அரசின் கடமையாகும். எனவே, மனுதாரருக்கு தமிழ்நாடு அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ஆண்டு தோறும் 1 லட்சத்து 20 ஆயிரம் வழங்க உத்தரவு
மனுதாரரின் 3-வது குழந்தைக்கு 5 வயதாகும்போது குழந்தை அரசு பள்ளியிலோ, தனியார் பள்ளியிலோ அவர் சேர்க்கப்பட்டால், 21 வயது வரையிலோ அல்லது பட்டப்படிப்பு முடிக்கும் வரையிலோ இலவச கல்வி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த குழந்தையின் கல்வி கட்டணம், பாடபுத்தகங்கள், எழுதுபொருட்கள் ஆகியவற்றுக்காக மாதம் ரூ.10 ஆயிரம் வீதம் கணக்கிட்டு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை அரசு வழங்க வேண்டும். மனுதாரரின் 3-வது குழந்தையையும் பெண் குழந்தைகளுக்கான நலத்திட்டத்தில் அரசு சேர்க்க வேண்டும்” என தீர்ப்பளித்தார்.