’இனி என்னை யாரும் ஒதுக்க மாட்டார்கள்...’ - முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு சிறுமி டான்யா மகிழ்ச்சி
அறுவை சிகிச்சையின் மூலம் தனது கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய சிறுமி டான்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
”இனி என்னை யாரும் ஒதுக்க மாட்டார்கள். ஜாலியாக பள்ளிக்குச் செல்வேன். மருத்துவராவதே என் கனவு” என சிறுமி டான்யா தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையின் மூலம் தனது கன்னம் சரியானது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய சிறுமி டான்யா முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, வீராபுரம் ஶ்ரீ வாரி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதியினர். இவர்களுக்கு 2012ஆம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டான்யாவுக்கு ஒன்பது வயதாகிறது.
டான்யா வீராபுரம் அரசினர் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். முன்னதாக சிறுமி டான்யா மிக அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு ஒரு பக்க கன்னம் முழுவதும் சிதைந்த நிலையில் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து முன்னதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதனை அறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளும் மாநில அரசு மூலம் செய்து தரப்படும் எனக் கூறியிருந்தார். அதன்படி சிறுமி டான்யாவுக்கு அறுவை சிகிச்சை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதன்படி சவிதா மருத்துவக் கல்லூரியில் 10 பேர் கொண்ட மருத்துவக் குழுவினரால் சிறுமிக்கு முகச்சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில் மகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காக முன்னதாக முதலமைச்சருக்கு சிறுமி டான்யாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
View this post on Instagram
கடந்த சில நாள்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் ஐசியூ வார்டில் இருந்த சிறுமி டான்யா நேற்று (செப்.12) சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஸ்டாலின் சிறுமி டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.