PM Modi Visit to Chennai: நாளை சென்னை வரும் பிரதமர் மோடி.. எங்கெல்லாம் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது?
பிரதமர் மோடி நாளை சென்னை வருகை தர உள்ள நிலையில், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வரும் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நாளை பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வருகை தர உள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பிரதமர் மோடி 6 முறை தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ளார். தற்போது 7வது முறையாக நாளை தமிழ்நாடு வருகிறார். சென்னையில் நாளை ரோடு ஷோ மேற்கொள்கிறார் பிரதமர் மோடி. இதற்காக 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரோட்-ஷோ நடைபெற உள்ள பகுதிகளில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 144 தடை சட்டத்தின் கீழ் சென்னையில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு பணிகளுக்காக சென்னையில் 22 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை ஜி.எஸ்.டி – அண்ணா சாலை, ஒய்.எம்.சி.ஏ, நந்தனம் – தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும். இதன் காரணமாக மக்களுக்கு போக்குவரத்து காவல் துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. நாளை ஏப்ரல் 9 ஆம் தேதி, ஜி.எஸ்.டி சாலை, மவுண்ட் - பூந்தமல்லி சாலை, CIPET சாலை, 100 அடி சாலை, அண்ணா சாலை, படேல் சாலை, காந்தி மண்டபம் சாலை, தியாகராய பகுதி சாலைகளை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தியாகராய நகர், வெங்கட் நாராயண சாலை, ஜி.என். செட்டி சாலை, வடக்கு போக் சாலை ஆகிய பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாளை பிற்பகல் வணிக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து சுத்திப்பாரா செல்லும் வாகனங்கள்.
- மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை செல்லும் வாகனங்கள்.
- CIPET - அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
- வடபழனியில் -தியாகராய நகர், வள்ளுவர்கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
- CIPET -விமான நிலையம், காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
- டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
- அண்ணா சிலையில் - மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்