அறிவாலயத்திற்கு பதிலாக அமைந்தகரை – திமுக பொதுக்குழு இடம் மாறிய பின்னணி..!
பொதுக்குழு கூட்டம் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு பதில் அமைந்தகரையில் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக பொதுக்குழு வரும் 9ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுக்குழு கூட்டம் திமுக தலைமையகமான அறிவாலயத்திற்கு பதில் அமைந்தகரையில் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி இருந்தவரையில் அறிவாலயத்தில் உள்ள அரங்கத்தில் பொதுக்குழு கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் கூட்டப்பட்ட பொதுக்குழு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்றது.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடுவதற்கு ஏதுவாக பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டதுடன், அசைவ உணவும் பொதுக்குழு கூட்டம் முடிந்ததும் நிர்வாகிகளுக்கும் உறுப்பினர்களுக்கும் பறிமாறப்பட்டது. கலைஞர் கருணாநிதி இருந்தவரை அறிவாலயத்தில் கூடும் ஒவ்வொரு பொதுக்குழு கூட்டத்திற்கும் சைவ உணவே பறிமாறப்பட்டு வந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபோது கூட்டப்பட்ட முதல் கூட்டதில் அசைவ உணவு பறிமாறப்பட்டது.
இந்நிலையில், புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு நடைபெற்று, பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டும் பொதுக்குழு கூட்டத்தை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கூட்ட முடிவெடுக்கப்பட்டது. ஆனால், அங்கு மெட்ரோ ரயில் பணிகளும், மழை நீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், பொதுக்குழு கூட்டத்தை ராயப்பேட்டையில் நடத்தினால் பொதுமக்களுக்கு சிரமமாக இருக்கும் என நினைத்து, அமைந்தக்கரையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பள்ளி அரங்கத்தில் பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கூட்டப்படும் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் அசைவ உணவுகளோடு தடபுடலாக ஏற்பாடுகளை செய்து, கூட்டத்தை நடத்த திமுக தலைமை முடிவெடுத்திருக்கிறது. அதோடு, இந்த கூட்டத்தில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்படுவதாலும், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவுள்ள மு.க.ஸ்டாலின் என்ன பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே எகிறியுள்ளது.
ஏற்கனவே, அமைச்சர்கள் பலர் வாய்த் துடுக்காக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்டுள்ள நிலையில், அவர்களுக்கு கடிவாளம் போடும் வகையிலும், ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அமைச்சர்கள் மாவட்ட செயலாளர்களின் பதவிகள், தயவு தாட்சண்யம் இன்றி பறிக்கப்படும் என்ற எச்சரிக்கையை மு.க.ஸ்டாலின் விடுக்கவுள்ளதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதோடு, துணைப் பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கையை 7ஆக உயர்த்தவும், சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பதிலாக புதிய பெண் துணைப் பொதுச் செயலாளரை நியமிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
தியாகராஜர் கோயில் மேற்கு கோபுர வாசல் நடைபாதை மண்டபம் விரிசல் - சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை