கடலூரில் அருவாள்மூக்கு திட்டம்! வெள்ளத்திலிருந்து 15,600 ஏக்கர் நிலங்கள் பாதுகாப்பு - அதிரடி காட்டும் அமைச்சர் பன்னீர்செல்வம்
கடலூர் தியாகவல்லி பகுதியில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அருவாள்மூக்கு திட்டப் பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்

கடலூர் ; கடலூர் தியாகவல்லி பகுதியில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அருவாள்மூக்கு திட்டப் பணிகளை வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
அருவாள்மூக்கு திட்டப் பணி ஆய்வு
கடலூர் தியாகவல்லி பகுதியில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அருவாள்மூக்கு திட்டப் பணிகளை பார்வையிட்டு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் மேலாண்மை இயக்குநர் (சர்க்கரைத் துறை) அன்பழகன் , மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டதற்கிணங்க மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்கள் ஆகியவற்றை மழைநீர் வடிவதற்கு ஏதுவாக தூர்வாரப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 239 பாதிக்க கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டு போதிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களில் களஆய்வு மேற்கொண்டு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் வெள்ள தடுப்பு பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியதன் அடிப்படையில் நீண்டகாலமாக இப்பகுதி பொதுமக்கள் மற்றும் விசாயிகளின் கோரிக்கையாக இருந்த அருவாள்மூக்கு திட்டம் அறிவிக்கப்பட்டு, 23.06.2024 அன்று தொடங்கப்பட்டு தற்போது பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.
இத்திட்டத்தில் கீழ்பரவனாற்றின் குறுக்கே, அருவாள்மூக்கு என்ற இடத்தில் 160 மீட்டர் நீளம் கொண்ட புதிய தடுப்பணை மற்றும் மக்களின் போக்குவரத்திற்கு 62 மீ நீளமுள்ள புதிய இருவழி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. மேலும், கடலுக்கு 200 மீட்டருக்கு அருகாமையில் 73 மீட்டர் நீளம் கொண்ட புதிய கடைமடை ஒழுங்கியம் அமைக்கப்பட்டுள்ளது.
15,600 ஏக்கர் நிலங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்
அருவாள்மூக்கு பகுதியிலிருந்து 12.00 கி.மீ. தூரம் சென்று பழைய பரவனாறு மூலம் வெள்ளநீர் கடலில் கலப்பதை தவிர்த்து இத்திட்டத்தின் மூலம் 1600 மீ நீளத்தில் வெள்ளநீர் கடலில் கலக்கும் வகையில் புதிய கால்வாய் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. பரவனாற்றில் மழை காலங்களில் மழை நீருடன் சேர்த்து நெய்வேலி சுரங்கத்திலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஆற்றின் கரையோரம் உள்ள 24 கிராமங்கள் மற்றும் அப்பகுதிகளிலுள்ள விளைநிலங்கள் வெள்ளநீரில் பாதிப்படைவது தொடர் நிகழ்வாக இருந்து வந்தது. தற்போது அருவாள்மூக்கு பணி நிறைவுறும் பட்சத்தில், பரவனாற்றிலிருந்து வரும் வெள்ளநீர் பழைய மற்றும் புதிய கால்வாய்கள் மூலம் விரைவாக வடிவிக்கப்பட்டு, கீழ்பரவனாற்றின் இருபுறமும் உள்ள 15,600 ஏக்கர் நிலங்கள் வெள்ளப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கப்படும்.
விளைநிலங்கள் பாதிப்புகள் குறித்து டிசம்பர் மாதத்திற்குள் கணக்கெடுக்கும் பணி
இதன்மூலம் அருகிலுள்ள 24 கிராமங்களில் உள்ள மக்களின் குடியிருப்புகள், உடைமைகள் விவசாய பொருட்கள், மனித உயிர்கள் மற்றும் கால்நடைகள் போன்றவை பாதுகாக்கப்படுவதோடு, புதிய தடுப்பணை மூலம், கடல் நீர் உட்புகுவது தடுக்கப்படுவதால் கடலிலிருந்து கீழ்பரவனாற்றிற்கு மேல்புறத்திலுள்ள சுமார் 23.00 கி.மீ. தூரத்தில் உள்ள விளைநிலங்கள் பாதிக்கப்படுவது முற்றிலும் தடுக்கப்படும். கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், விளைநிலங்கள் பாதிப்புகள் குறித்து டிசம்பர் மாதத்திற்குள் கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு உரிய நிவாணரங்கள் வழங்கப்படும்.
கடந்த ஆண்டு டெல்டா பகுதி உள்ளிட்ட மாநிலத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையில் பாதிக்கப்பட்ட 2 இலட்சத்து 28 ஆயிரம் ஹெக்டர் நிலங்களுக்கு சுமார் 287 கோடி மதிப்பீட்டில் இழப்பீடுகள் விரைவில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.





















