MBBS Admission: எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேரலாம்; எப்படி? தகுதி, சான்றிதழ்.. பிற விவரங்கள்
மாணவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
எம்பிபிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர விண்ணப்பப் பதிவு இன்று (ஜூன் 28) தொடங்கி உள்ள நிலையில், மாணவர்கள் https://tnmedicalselection.net/ மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பிக்க வேண்டும்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் ஆகிய மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் ஆகும். அண்மையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு தொடங்கி உள்ளது. மாணவர்கள் ஜூலை 10ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள், பெற்றோர்கள் அல்லது பாதுகாவலருடன் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரிகள் அல்லது அரசு சேவை மையங்களுக்கு (Tamil Nadu Facilitation Centre) அனைத்து அசல் சான்றிதழ்களுடன் செல்ல வேண்டும். அங்குள்ள அதிகாரிகளுடன் உதவியுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கலந்தாய்வு ஜூலை 3-வது வாரத்தில் தொடங்கும். சிறப்பு பிரிவினர் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கு நேரடியாகவும், பொதுக்கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெற உள்ளது.
தரவரிசைப் பட்டியல், கலந்தாய்வு தேதிகள் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பப் படிவத்துக்கான கட்டணம் ரூ.500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களையும் சரியாகப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து, சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
டிசம்பர் 2023-க்குள் 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
சிறப்புப் பிரிவினரில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளும் மாற்றுத் திறனாளிகளும் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அதே நேரத்தில் விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் நேரடியாகவும் ஆன்லைனிலும் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாணவர்கள்,
செயலாளர், தேர்வுக் குழு,
மருத்துவக் கல்வி இயக்ககம்,
162, பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை-600 010 என்ற முகவரிக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டியது அவசியமாகும்.
என்னென்ன சான்றிதழ்கள் தேவை?
* நீட் அனுமதி அட்டை மற்றும் மதிப்பெண் அட்டை.
* பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (சான்றிதழின் இருபுறமும்).
* 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (சான்றிதழின் இருபுறமும்).
* உயர் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அல்லது அதற்கு இணையான தேர்வு சான்றிதழ்
* 12ஆம் வகுப்பு முடித்த பிறகு பெறப்பட்ட இடமாற்றச் சான்றிதழ்
* 6ஆம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் படித்ததற்கான சான்றுக்கான சான்றிதழ்.
* சாதிச் சான்றிதழ்.
* இருப்பிடச் சான்றிதழ்.
* சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள், சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு, உரிய சான்றிதழ்களுடன் கூடிய சிறப்பு வகைப் படிவம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்துடன் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
* 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்தவர்கள், 7.5% சிறப்பு இட ஒதுக்கீட்டுக்கு முதன்மைக் கல்வி * அதிகாரியின் அத்தாட்சிச் சான்றிதழ்
* பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
* மாநில வாரியம் & CBSE வாரியம் தவிர மற்ற பல்கலைக்கழகங்கள் / வாரியங்களில் படித்ஹ்ட விண்ணப்பதாரர்களுக்கு, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட தகுதிச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
* நீதிமன்ற உத்தரவுகள் (ஏதேனும் இருந்தால்)
* கூடுதல் துணை ஆவணங்கள் (ஏதேனும் இருந்தால்)
மாணவர்கள் https://ugreg23.tnmedicalonline.co.in/ug//MyCourse.aspx என்ற இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://tnmedicalselection.net/news/27062023222025.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.