"இந்தித் திணிப்பு எதிர்ப்பு; கலைஞர் கருணாநிதி நீட்டி பிடித்த நெருப்பு," வைரமுத்துவின் புகழஞ்சலி வைரல்!
இன்றைய தினம் பல தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து புகழ் வணக்க மடல் ஒன்றை எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
"இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது கலைஞர் கருணாநிதி நீட்டிப் பிடித்த நெருப்பு" என்று கவிஞர் வைரமுத்து கலைஞர் கருணாநிதியின் நினைவு தினமான இன்று புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
கலைஞர் நினைவு நாள்
ஆகஸ்ட் 7 ஆம் தேதியான இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் அமைதிப் பேரணியில் கலந்து கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தார். இன்றைய தினம் பல தலைவர்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து அஞ்சலி மடல் ஒன்றை எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
கலைஞர் ஒரு தத்துவம்#KalaignarForever | #கலைஞர் #கலைஞர்100 | #Kalaignar100 pic.twitter.com/eR4gVqeiaX
— வைரமுத்து (@Vairamuthu) August 7, 2023
வைரமுத்து ட்வீட்
"சதையும் எலும்பும் மறைந்த பிறகும் தத்துவங்கள் வாழ்கின்றன
கலைஞர் ஒரு தத்துவம்
இன்று இருமொழிக் கொள்கை என்ற தத்துவம்
தாய்மொழிக் காப்பு என்ற கேடயமாகவும்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்ற ஈட்டியாகவும் இந்த நிமிடம் கலைஞர் வாழ்கிறார்
இந்தித் திணிப்பு எதிர்ப்பு என்பது அவர் நீட்டிப் பிடித்த நெருப்பு; அணைய விடாதீர்
நெருப்பை அரிப்பதில்லை கரையான்" என்று எழுதி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் வைரமுத்து.
இந்தி திணிப்பு எதிர்ப்பு
இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், இந்தி மொழியை, இந்தியாவின் ஒரே அலுவல் மொழியாக மாற்றும் முயற்சியை எதிர்த்து, இந்தி பேசாத சில மாநிலங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் நடத்தப்பட போராட்டம் ஆகும். இந்தி மொழி பேசாத மாநிலங்களின் கல்விப் பாடத்திட்டங்களில் இந்தியைக் கட்டாய பாடமாக்கும் இந்திய அரசின் முயற்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு முன்னோடியானவர்கள் பெரியார், அண்ணா, கலைஞர் போன்றவர்கள். இதனை தற்போது குறிப்பிடும் வகையில் வைரமுத்துவின் ட்வீட் அமைந்துள்ளது.
அமித்ஷா பேச்சு சர்ச்சை
மாநில மொழிகளுக்கு ஹிந்தி மொழி போட்டி மொழி அல்ல என்றும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அலுவல் மொழியாக இந்தியை ஏற்றுக்கொள்ளுவதற்கான தேவையை உருவாக்க வேண்டும் என்றும் ஒரு சில நாட்களுக்கு முன்னர் அமித் ஷா பேசி இருந்தார். அந்த செய்தி தமிழ் நாட்டில் பெரும் அதிர்வலையை கிளப்பி இருந்தது. முதல்வர் ஸ்டாலின், எம்.பி. கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இந்தியை ஏற்பதில் தயக்கம் இருந்தாலும் இறுதியில் எந்த எதிர்ப்புமின்றி ஹிந்தி ஏற்றுக்கொள்ளப்படும் என்று அவர் கூறியது இந்தி திணிப்பு எதிர்ப்பு மீது மீண்டும் வெளிச்சம் விழுந்துள்ளது. அதன் நீட்சியாக பலர் வைரமுத்துவின் டிவீட்டை பார்க்கின்றனர்.