Tirupati Rain: மழை! மழை! திரும்பும் திசை எல்லாம் திருப்பதியில் மழை - ரெட் அலர்ட் எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஆந்திராவின் திருப்பதியில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால், பல பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திராவை நோக்கி நகர்ந்த காரணத்தால் ஆந்திராவில் திருப்பதி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆந்திரா நோக்கி நகர்ந்த காரணத்தால் சென்னையில் இன்று எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை.
திருப்பதியில் கொட்டித் தீர்த்த கனமழை:
ஆந்திராவின் திருப்பதி மாவட்டத்திற்கு உட்பட்ட சூலூர்பேட்டையில் அதிகளவு மழைப்பொழிவு பதிவானது. இங்கு 22.04 செ.மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியது. சித்தாமூர் மண்டல் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. சூலூர்பேட்டை அடுத்தபடியாக சித்தாமூர் மண்டலில் அதிகளவு மழைப்பொழிவு பதிவாகியது. 13.44 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இதனால், திருப்பதி திருமலைக்குச் செல்லும் பாதையில் உள்ள வழித்தடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
The heavy rains caused Landslides on Tirumala Ghat Road this morning, which led to slow movement of traffic.
— Surya Reddy (@jsuryareddy) October 16, 2024
TTD mobilized JCBs to carrying out repair work and clear the debris.#Tirumala #Tirupati #Landslide #TirumalaGhatRoad #HeavyRain pic.twitter.com/DTQQqnzWxp
சூலூர்பேட்டையில் கடந்த திங்கள்கிழமை 5.42 செ.மீட்டர் மழை பதிவாகியது. செவ்வாய் கிழமை 6.62 செ.மீட்டர் அளவு மழை பதிவாகியது. இந்த நிலையில், இன்று 20.04 செ.மீட்டர் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், அந்த பகுதியில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திருப்பதிக்குச் செல்லும் சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்:
தடாவில் 12.24 செ.மீட்டர் மழையும், தோரவரிசத்ரமில் 12.12 செ.மீட்டர் மழையும், வடக்கு மண்டலில் 10.72 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பதி – சென்னை நெடுஞ்சாலையில் வடமலைப்பேட்டை, நாராயணவனத்தில் மழை கொட்டித் தீர்த்தது. வடமலைப் பேட்டையில் 11.24 செ.மீட்டர் மழையும், நாராயணவனத்தில் 10.72 செ.மீட்டர் மழையும் நேற்று மாலை நிலவரப்படி பதிவாகியது.
திருப்பதி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தை பொறுத்தவரை 6 ஆயிரத்து 918.3 மில்லி மீட்டர் மழை பதிவாகுவது வழக்கம். ஆனால், திருப்பதி மாவட்டத்தில் தற்போது வரை 6 ஆயிரத்து 481.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. திருப்பதியின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அங்கு சாலைகளில் தேங்கும் தண்ணீரை அகற்றும் பணியில் அதிகாரிகளும், ஊழியர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
ரெட் அலர்ட்:
ஆந்திராவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக திருப்பதி, சித்தூர், நெல்லூருக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் அதிகளவு மழைப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை சில பகுதிகளில் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் பல பகுதிகளில் நாளை அதிகனமழை இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.