NLC Issue : '5 கோடி இழப்பீடு கொடுத்தாலும் தேவையில்லை': என்.எல்.சி போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேச்சு..
என்.எல்.சி நிறுவனத்தில் சுரங்கப்பணிகள் தொடர்ந்தால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடலூரில் என்.எல்.சி விரிவாக்க பணிகளை கண்டித்து பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அன்புமணி ராமதாஸ், “300 கிராமங்களில் 300 கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் போடப்பட்டது. விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என்ற தீர்மானம் போடப்பட்டது. ஆனால் தற்போது காவல் துறையை ஏவி, அடக்கமுறையை ஏவிவிட்டு பொக்லேன் வைத்து நிலத்தை கையகப்படுத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் நாளை பணிகள் தொடங்கப்பட்டால், ஒட்டுமொத்த மாவட்டமும் கூடி சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபடுவார்கள்.
கடலூரில் மட்டுமல்லாமல் விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தப்படும். இது ஒப்புக்கு பேச்சுக்கான போராட்டம் இல்லை, மண்ணையும் மனிதனையும் காப்பாற்றும் போராட்டம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “1956-இல் என்.எல்.சி நிறுவனம் இங்கு வருவதற்கு முன் வெறும் 8 அடியில் நிலத்தடி நீர் கிடைத்தது. உலகிலேயே தன்னூற்றாக இரண்டு இடங்களில் மட்டுமே நீர் கிடைத்தது. ஒன்று ஆஸ்திரேலியா மற்றொன்று நெய்வேலி. தற்போது நெய்வேலியில் சுமார் 1000 அடியில் தான் நிலத்தடி நீர் கிடைக்கிறது. அதற்கு காரணமே என்.எல்.சி. தான். தன்னுடைய சுயநலத்திற்காக கோடிக்கணக்கான நீரை ராட்சத மோட்டார் வைத்து உறிந்து கடலுக்கு அனுப்பியது என்.எல்.சி தான். இதுவா வளர்ச்சி? நிலம் கொடுத்தவர்களுக்கு தற்போது வரை வேலை இல்லை. இதுவா வளர்ச்சி?” என காட்டத்துடன் பேசியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா? நிலக்கரியை எரித்து மக்களின் உடல்நிலையை பாதிக்க காரணம் என்.எல்.சி தான். என்.எல்.சி நிறுவனம் தரப்பில் மருத்துவ முகாம் கூட நடத்தப்படவில்லை. மூன்று தலைமுறைகள் நாசமாக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் துணைபோவது வெட்கக்கேடு. 296 ஜூனியர் எஞ்சினியர்களில், தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூட கிடையாது. கடந்த 2 மாதங்களுக்கு முன் அப்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக மாறியுள்ளது என்றும் தமிழ்நாட்டிலிருந்து வெளி மாநிலங்களுக்கு மின்சாரம் கொடுக்கிறோம் என்றும் தெரிவித்தார். அப்படி மின்மிகை மாநிலமாக இருக்கும் தமிழ்நாட்டில் எதற்கு என்.எல்.சி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.