Star Series Notes: ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் குறியீடு இருந்தா செல்லுமா? செல்லாதா? ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு
ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா என மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்ட பிறகும், நாட்டின் பல பகுதிகளில் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நாணயங்கள், கடைகளில் ஏற்காத சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக கடந்த மே மாதம் 19ஆம் தேதி ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.
இதனிடையே, ரூபாய் நோட்டுகளின் சீரியல் நம்பர்களில் ஸ்டார் குறியீடு இருந்தால், அதை கடைகளில் வாங்க மறுக்கிறார்கள் என புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஸ்டார் குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லுமா? செல்லாதா என மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி விளக்கம்:
பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் ஸ்டார் சீரிஸ் நோட்டுகள் இன்னும் புழக்கத்தில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, நட்சத்திரக் குறியீடு அச்சிடப்பட்ட நோட்டுகளை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தலாம். இந்த குறிப்பிட்ட நோட்டுகளை திரும்பப் பெறுவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஸ்டார் சீரிஸ் நோட்டுகளுக்கும் மற்ற நோட்டுகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது அவை நாட்டில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளிலும் பயன்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார் சின்னம் உள்ள நோட்டுகளுக்கும் மற்ற பண நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்பதை கீழே பார்ப்போம்.
ஸ்டார் சீரிஸ் நோட்டுகள் என்றால் என்ன?
பண நோட்டுகளின் சீரியல் நம்பர்களில் 3 எழுத்துகளுக்கு அடுத்தப்படியாக இந்த ஸ்டார் சின்னம் அச்சிடப்படுகிறது. அதாவுது எழுத்துகளுக்கும் எண்களுக்கும் நடுவே ஸ்டார் சின்னம் அச்சிடப்படும். இருப்பினும், இந்த சின்னம் இல்லாத நோட்டுகளுக்கும் சின்னம் அச்சிடப்பட்ட நோட்டுகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
அப்படி, இருந்த பின்னும், சில ரூபாய் நோட்டுகளில் ஸ்டார் சின்னம் அச்சிடப்படுவது ஏன்?
இந்த ரூபாய் நோட்டுகளில் உள்ள ஸ்டார் குறியீடு உண்மையில், இந்த நோட்டுகள் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கிறது. இந்த நோட்டுகளின் செல்லுபடியாகும் தன்மையை கேள்விக்குட்படுத்தும் வகையில், இந்த நோட்டுகளில் ஏன் நட்சத்திர அடையாளம் உள்ளது என்பது குறித்து சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்திற்குப் பிறகு, ரிசர்வ் வங்கி, இதுகுறித்து விளக்கம் அளித்தது.
இதுகுறித்து ஆர்பிஐ வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையில், "வரிசையான எண்களை கொண்டு அச்சிடப்படும் ரூபாய் நோட்டுகளில் தவறாக அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளுக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் ரூபாய் நோட்டின் சீரியல் எண்ணில் நட்சத்திரம் (*) சின்னம் சேர்க்கப்படுகிறது.
நட்சத்திரம் (*) சின்னம் கொண்ட ரூபாய் நோட்டு, மற்ற ரூபாய் நோட்டுகளை போலவே சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகள் ஆகும். சீரியல் எண்களில் எழுத்துக்கும் எண்ணுக்கும் இடையில் ஒரு நட்சத்திரம் (*) சின்னம் சேர்க்கப்படுவதைத் தவிர, இதற்கு வழக்கமான நோட்டுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. நட்சத்திரம் (*) சின்னம் என்பது மாற்றப்பட்ட/மீண்டும் அச்சிடப்பட்ட பணத்தாள் என்பதற்கான குறியீடாகும்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ரூ 500 ரூபாய் நோட்டுகளில் நட்சத்திர சின்னம் அச்சிடப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், குறைந்த மதிப்புள்ள ரூ 10, ரூ 20 மற்றும் ரூ 50 போன்ற நோட்டுகளில் நட்சத்திர சின்னம் அச்சிடப்பட்டவை, 2006 முதல் புழக்கத்தில் உள்ளன.