(Source: ECI/ABP News/ABP Majha)
Anbumani Ramadoss: உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டம்: அரசுக்கும், ஆளுநருக்கும் அன்புமணி கேள்வி!
ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தினை இழந்து மேலும் ஒருவர் உயிரிழந்தை அடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.
Anbumani Ramadoss: ஆன்லைன் சூதாட்டத்தினால் பணத்தினை இழந்து மேலும் ஒருவர் உயிரிழந்தை அடுத்து பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டுவரப்பட்ட பின்னர் நடக்கும் 42வது தற்கொலை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மதுரை அருகே சாத்தமங்கலத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த உணவக ஊழியர் குணசீலன் என்பவர் தற்கொலை செய்து கொண்டார் என்ற செய்தியறிந்து வேதனையடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த 42ஆவது தற்கொலை இதுவாகும். ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு நிகழ்ந்திருக்கும் 13ஆவது தற்கொலை இது. இதுவரை நடந்த தற்கொலைகளுக்கும், இந்த தற்கொலைக்கும் ஆளுநரே பொறுப்பேற்கவேண்டும்!
ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் நிறைவேற்றப்பட்டு 112 நாட்கள் ஆகிவிட்டன. அதுகுறித்து ஆளுநர் எழுப்பிய ஐயங்களுக்கு, சட்ட அமைச்சர் ரகுபதி நேரில் விளக்கம் அளித்து 68 நாட்கள் ஆகிவிட்டன. ஆனாலும் சட்டத்திற்கு இன்றுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது முறையல்ல!
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்த அரசின் விளக்கங்கள் மனநிறைவு அளித்தால் ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் திருப்பி அனுப்ப வேண்டும். இரண்டையும் செய்யாமல் சட்டத்தை கிடப்பில் போட்டு, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு வாய்ப்பளிக்கக் கூடாது!
தமிழ்நாட்டில் இனியும் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள் நிகழாமல் தடுக்க தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும். இதுதொடர்பாக ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவேண்டும்; இல்லாவிட்டால் மாற்று ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம்:
கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி சட்டப் பேரவையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை எதிர்த்தும், அதனை தடை செய்யவும் சட்டம் இயற்றியது. இதற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது. அக்டோபர் 1 ஆம் தேதி ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அவசர சட்டம் கொண்டு வரப்பட்ட பின் கூடும் சட்டசபை நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் காலாவதியாகிவிடும். அதன்படி நேற்றுடன் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் காலாவதியானது. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் நிரந்தர சட்டத்திற்கு அதாவது சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
மேலும், ஆன்லைன் சூதாட்டத்தை ஏன் தடை செய்ய வேண்டும், இந்த சட்டத்தை ஏன் அமல் படுத்த வேண்டும் என விளக்கம் கேட்டிருந்தார் ஆளுநர். அதற்கு தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்துள்ளது. ஆளுநருக்கு கடிதம் வாயிலாக பதில் அளித்த பிறகு இது குறித்து சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறுயது, ’’உலகம் முழுவதும் உள்ள டேட்டாக்களை வல்லுநர்களைக் கொண்டு ஆய்வு செய்தும், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டும் தான் இந்த ஆன்லைன் சூதாட்ட தடைச்சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சட்ட மசோதவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும். இந்த சட்டம் விரைவில் அமலுக்கு வரும். முதல்வர் ஸ்டாலின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வருவதில் மிகவும் உறுதியாக உள்ளார். ஆளுநர் கோரிய விளக்கங்களை அளித்துவிட்டோம் எனவும், அவரை சந்திக்க நேரம் கேட்டும் ஒதுக்கித் தரவில்லை’’ என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.