Aadi Month 2024: பக்தர்களே! ஆடி மாதம் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? முழு விவரம்
Aadi Month 2024: மிகவும் ஆன்மீகத்துவம் வாய்ந்த மாதமாக கருதப்படும் ஆடி மாதத்தில் பக்தர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் என்னென்ன? என்பதை கீழே காணலாம்.
தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக ஆடி மாதம் இருக்கிறது. நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் 17ம் தேதி பிறக்கிறது. ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாவட்டம் ஆகும்.
ஆடி மாதம் வந்துவிட்டாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆடி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் எது? எது? என்னென்ன என்பதை கீழே காணலாம்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில்:
உலகப்புகழ்பெற்ற கோயிலாகவும், தமிழ்நாட்டின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்வது மதுரை மீனாட்சியம்மன் கோயில். சிவபெருமான் சுந்தரேஸ்வரர் ரூபத்திலும், பார்வதி தேவி மீனாட்சியம்மன் வடிவத்திலும் காட்சி தரும் இந்த கோயில் ஆடி மாதம் செல்ல வேண்டிய கோயில்களில் முதன்மையானது. ஆடி மாதத்தில் சிவபெருமான் சக்தி தேவிக்குள் ஐக்கியமாகிவிடுவார் என்று கூறுவார்கள். இதனால், சிவனும், பார்வதி தேவியும் காட்சி தரும் மீனாட்சியம்மன் கோயிலுக்கு செல்வது தனிச்சிறப்பு ஆகும்.
காஞ்சி காமாட்சி கோவில்:
கோயில்கள் சூழ்ந்த நகரமாக திகழ்வது காஞ்சிபுரம். காஞ்சிபுரத்தை தனித்து காட்டச் செய்வது காஞ்சி காமாட்சியம்மன் கோயில் ஆகும். எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும் இந்த கோயிலில், ஆடி மாதம் காமாட்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், வழிபாடுகளும் நடைபெறும். ஆடி மாதத்தை முன்னிட்டு அம்மனை வழிபட காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்கு பக்தர்கள் குவிவார்கள்.
திருச்சி சமயபுரம் கோயில்:
தென் மாவட்ட மக்களுக்கு பிரதான அம்மன் கோயிலாக திகழ்வது சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகும். இந்த கோயிலில் ஆடி மாதம் மிகவும் பிரம்மாண்டமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. ஓம் சக்தி, பராசக்தி என்று பக்தர்கள் பக்திப்பரவசத்துடன் இங்கு அம்மனை வழிபட குவிவார்கள். திருச்சி சமயபுரம் கோயிலில் கூழ் ஊற்றுதல், அன்னதானம் என்று ஆடி மாத கொண்டாட்டம் களைகட்டும்.
மாசாணியம்மன் கோயில்:
தமிழ்நாட்டில் உள்ள அம்மன் கோயில்களிலே மிகவும் சக்திவாய்ந்த கோயிலாக கருதப்படுவது மாசாணியம்மன் கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு ஆணைமலை மாசாணியம்மன் கோயில் என்றும், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில் என்றும் பெயர் உள்ளது. 17 அடி உயரத்தில் நான்கு கைகள், மண்டை ஓடு, பாம்பு, மேளம், திரிசூலம் என ஆக்ரோஷமாக காட்சி தரும் தெய்வமாக இங்கு அம்மன் காட்சி தருகிறார்.
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில்:
வட தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான மாரியம்மன் கோயிலாக கருதப்படுவத மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில். சென்னையில் இருந்து சுமார் 90 கி.மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயில் ஆடி மாதம் என்றாலே கோலாகலமாக காணப்படும். பெண் பக்தர்கள் பெரும்பாலான அளவில் வந்து செல்லும் கோயிலாக இந்த கோயில் உள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில்:
விழுப்புரத்தில் அமைந்துள்ளது மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில். மிக மிக சக்திவாய்ந்த அம்மனாக அங்காளம்மன் கருதப்படுகிறார். பௌர்ணமி நாட்கள் உள்பட ஒவ்வொரு விசேஷ தினங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்காளம்மனை தரிசிக்க குவிவார்கள். ஆடி மாதம் வந்துவிட்டாலே அங்காளம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காத அளவில் காணப்படும். மிகவும் ஆக்ரோஷமாக அங்காளியாக இங்கு அம்மன் காட்சி தருகிறார்.
பெரியபாளையம் பவானியம்மன் கோயில்:
சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள புகழ்பெற்ற அம்மன் கோயிலாக திகழ்வது பெரியபாளையம் அம்மன் கோயில் ஆகும். பவானியம்மனாக இங்கு காட்சி தரும் இந்த அம்மனை பெரியபாளையத்தம்மாள் என்று பக்தர்கள் கூறுகின்றனர். இங்குள்ள பவானி அம்மனுக்கு ஆடி மாதம் சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும நடக்கும்.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில்:
சென்னையில் உள்ள திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மிக மிகப்பழமையான கோயில் ஆகும். இங்குள்ள அம்மனுக்கு ஒவ்வொரு விசேஷ நாட்களிலும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். பொதுவாக சென்னையில் ஆடி மாதம் கோலாகலமாக கொண்டாடப்படும். அதனால், ஆடி மாதம் என்றாலே வடிவுடையம்மன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் காணப்படும்.
கன்னியாகுமரி கடற்கரை குமரியம்மன் கோயில்:
கன்னியாகுமரியில் 8ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பது இந்த குமரியம்மன் கோயில். பல நூற்றாண்டுகளாக அமைந்துள்ள இந்த கோயிலின் அம்மன் மிகவும் சக்திவாய்ந்த அம்மனாக பக்தர்களால் வணங்கப்படுகிறார். ஒவ்வொரு ஆடி மாதமும் அம்மனை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.
மேலே கூறிய ஒவ்வொரு கோயிலிலும் உள்ள ஒவ்வொரு அம்மனையும் வணங்குவதால் தனிச்சிறப்புகள் உண்டாகும் என்று அந்தந்த கோயில் தல வரலாறு கூறுகிறது. பொதுவாக, இந்த கோயில்களுக்கு சென்றால் கவலைகள் நீங்கி நன்மைகள் பெருகும் என்பது பக்தர்கள் ஐதீகம் ஆகும்.