மேலும் அறிய
Advertisement
69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் பெரும் கலவரம் ஏற்படும் - அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் பெரும் கலவரம் ஏற்படும். இதற்கு ஸ்டாலின் தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
விழுப்புரம்: தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு, உச்சநீதிமன்றத்தில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்தாவிட்டால் 69 சதவீத இடஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும் ஆபத்து உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டால் பெரும் கலவரம் ஏற்படும் இதற்கு ஸ்டாலின் தான் முழு பொறுப்பேற்க வேண்டும். வரலாற்றில் சமூக நீதிக்கு ஸ்டாலின் துரோகம் செய்துவிட்டார் என்ற பட்டம் வராமல் இருக்க உடனடியாக சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கானை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சி.அன்புமணியை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் அன்புமணி காணை பகுதியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்த இடைத்தேர்தல் பெண்களுக்கு ஒரு முக்கியமான தேர்தல். இந்தியாவே இந்த தேர்தலை பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழக மக்கள், விக்கிரவாண்டி மக்கள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இடைத்தேர்தல் என்றால், எடைத்தேர்தல் என்று பொருள். எடைக்கு எடை பணம், பரிசுப் பொருட்கள் கொடுப்பார்கள். இதனை ஆளுங்கட்சி தான் செய்யும். தேர்தல் நேரத்தில் வருவார்கள் பணம் கொடுப்பார்கள் நாமும் அதனைப் பெற்றுக்கொண்டு பிறகு என்ன நடக்கிறது என்பதை கவனிப்பதில்லை. ஆனால் இந்த தேர்தலில் நீங்கள் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும். தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மதுக்கடைகள், சாராயக்கடைகள் உள்ளன. ஆளும் கட்சிக்கு தெரியாமல் ஒரு சொட்டு கள்ளச்சாராயம் காய்ச்சவோ, விற்கவோ முடியாது. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் இறக்கவில்லை தமிழக அரசு அவர்களை கொலை செய்துள்ளது. திமுக அரசுக்கு தெரியாமல், காவல்துறைக்கு, ஆளுங்கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாமல் சாராயம் விற்க முடியாது. காசுக்காக இவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.
தமிழகத்தில் இரு பெரும் சமுதாயங்களாக இருப்பது தாழ்த்தப்பட்ட சமுதாயம், வன்னியர் சமுதாயம். இந்த இரண்டு சமுதாயங்களும் சேர்ந்தால் 40 விழுக்காடு மக்கள் தொகை உள்ளனர். இந்த இரண்டு சமூகங்களும் படிப்பு, வேலை இல்லாமல் ஏழ்மை நிலையிலேயே உள்ளது. இரண்டு சமுதாயங்களுக்கிடையே மோதலை உருவாக்குகிறார்கள். இந்த இரண்டு சமூகங்களும் பிரிந்து இருந்தால் தான் இத்தனை ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட கட்சிகளுக்கு வாக்களிப்போம். இதனை தாழ்த்தப்பட்ட மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு பெரிய சமுதாயங்களுக்கும் அதிகாரம் வேண்டும். 40 விழுக்காடு மக்கள் ஒன்று சேர்ந்தால் திமுக உள்ளிட்ட கட்சிகள் நமக்கு தேவையில்லை, நம்மிடம் அதிகாரம் இருக்கும். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு எதிரி தாழ்த்தப்பட்ட சமுதாயம் என்றும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரி வன்னியர் சமூகம் என்கிற நிலையை உருவாக்கி விட்டார்கள். யாருக்கும் யாரும் எதிரி இல்லை. வன்னியர்களுக்கு தாழ்த்தப்பட்ட சமுதாயம் எதிரி கிடையாது. இருவருக்கும் பொது எதிரி யார் என்றால் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளாகியும் இந்த சமுதாயங்கள் முன்னேறவிடாமல் செய்தவர்கள் தான் எதிரி. திமுக பிரித்தாலும் சூழ்ச்சியை கையாள்கிறது.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 95 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மக்கள். 15 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர் ராமதாஸ் வீட்டில் உள்ள அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தவர். திருமாவளவன். திமுக வெறுப்பு அரசியலையும், அடையாள அரசியலையும் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் ஒரு பொது தொகுதி கேட்டார் ஆனால் ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகளுக்கு பொதுத் தொகுதி கொடுக்க முடியாது என கூறிவிட்டார். தாழ்த்தப்பட்ட மக்களை திமுக ஓட்டு வாங்கியாக பார்க்கிறது. ஆனால் பாமக நீங்கள் முன்னேற வேண்டுமென நினைக்கிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தான் 2007-ல் அகில இந்திய அளவில் மருத்துவ படிப்பில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பழங்குடியின மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆண்ட கட்சிக்கும், ஆளும் கட்சிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சி குறித்து எந்த சிந்தனையும் கிடையாது. திமுக தாழ்த்தப்பட்ட மக்கள் வளர கூடாது என்பதில் குறியாக உள்ளது. சமூகநீதிக்கும் ஸ்டாலினுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
சமூக நீதி என்றால் ஒரு கிலோ எவ்வளவு என ஸ்டாலின் கேட்பார். ஸ்டாலினை சுற்றியுள்ள எவா.வேலு. கே.என்.நேரு. சேகர்பாபு. பொன்முடி ஆகியோர்களுக்கு சமூக நீதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்தியாவிலேயே சமூகநீதி பேசும் ஒரே தலைவர் ராமதாஸ். அம்பேத்கர் அவர்களுக்கு பிடித்த நிறம் என்பதால் பாமக கட்சி கொடியில் நீளம் உள்ளது. அம்பேத்கருக்கு பிடித்த சின்னம் யானை என்பதால் முதன் முதலில் பாமக யானை சின்னத்தில் போட்டியிட்டது. கன்ஷிராம் கொண்டதற்கு இணங்க யானை சின்னம் அவர்களுக்கு கொடுத்தோம். நமக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும். நாம் ஆள காலமும், நேரமும் வந்துவிட்டது. ராமதாஸ் வந்த பிறகு தான் வட தமிழ்நாட்டில் கலவரம் இல்லாமல் உள்ளது. ஆனால் தென் மாவட்டங்களில் தினமும் 10 கொலை நடைபெறுகிறது. வடமாவட்டம் அமைதியாக இருக்கிறது. மாற்றம் ஏற்பட அனைவரும் மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ்:
தமிழ்நாட்டில் 69 இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீடு 1994 இல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்பட்டது அதன் தொடர்ச்சியாக அதன் மீது 69 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என 2007 உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு மீண்டும் 2010ல் உச்ச நீதிமன்ற ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின்படி தமிழ்நாட்டில் 69 விழுக்காடு தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களா என கேள்வியை எழுப்பிய நீதிபதிகள் இன்னும் ஓராண்டுக்குள் கணக்கெடுப்பை நடத்தி 69 விழுக்காட்டை உறுதி செய்ய வேண்டுமென 2010ல் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2012ல் கணக்கெடுப்பு நடத்தாமல் நீதிமன்றத்தில் நியாயப்படுத்தியது. 2021ல் தினேஷ் என்பவர் புதிய வழக்கு ஒன்றை கொடுத்துள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றம் மகாராஷ்டிராவில் மராட்டா இட ஒதுக்கீடு தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு முடிந்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு எடுத்துக்கொள்வோம் என கூறியது.
தற்போது மராட்டா இடஒதுக்கீடு வழக்கு முடிந்துள்ளது. ஜூலை எட்டாம் தேதி உச்ச நீதிமன்றம் கூடுகிறது. நிச்சயமாக 69 சதவீத வழக்கை நீதிபதிகள் கையில் எடுப்பார்கள். அப்போது தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்களா என கேள்வி எழும். அப்போது தமிழக அரசால் பதில் சொல்ல முடியாது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்ய வாய்ப்புள்ளது. இது மிகப்பெரிய அநீதி. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லியும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தமிழக அரசு தயங்கி வருகிறது. சமூகநீதி பேசும் திமுக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்தினால்தான் 69% இட ஒதுக்கீடு தொடரும். இல்லை என்றால் 69% இட ஒதுக்கீடு உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்படும். இது குறித்து பலமுறை கூறிவிட்டோம் ஆனால் திமுக அரசு எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் உள்ளது. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த எங்களுக்கு அதிகாரம் இல்லை என தமிழக அரசு கூறுகிறது.
ஆனால் 1984 அம்பாசங்கர் ஆணையம் வீடுவீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தியது. இதனை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. கடந்த 2008 ஆம் ஆண்டு பீகாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை அம்மாநில உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் ஏற்றுக் கொண்டுள்ளது. சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என ஸ்டாலின் அரசு பொய் சொல்லி வருகிறது. தமிழக அரசுக்கு மக்கள் அழுத்தம் கொடுக்கவில்லை என்றால் உறுதியாக எச்சரிக்கிறேன் 69 சதவீத இட ஒதுக்கீடு ரத்து ஆகும். 69% இட ஒதுக்கீட்டின் மீது உச்சநீதிமன்றத்தில் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. 69 சதவீத இடஒதுக்கீடு ரத்தானால் தமிழ்நாட்டில் மிகப்பெரிய கலவரம் வரும். அதற்கு ஸ்டாலினும் திமுக அரசும் தான் காரணமாக இருப்பார்கள். முன்னெச்சரிக்கையாக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்த வேண்டும்.
இடஒதுக்கிட்டால் எந்தெந்த சமுதாயம் பயன் பெற்றுள்ளது. எந்தெந்த சமுதாயங்கள் பயன்பெறவில்லை என்பதை தெரிந்து கொள்ளக்கூட ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை. எந்தெந்த சமுதாயங்கள் பின்தங்கியுள்ளது, எந்தெந்த சமுதாயங்கள் பயன்பெற்றுள்ளன என்பதை தெரிந்து கொள்ள கூட ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என்றால் பிறகு ஏன் நிர்வாகம் செய்ய வேண்டும், ஸ்டாலின் முதல்வராக இருக்க வேண்டும். தமிழக அரசையும், மக்களையும் எச்சரிக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து வந்துள்ளது. ஸ்டாலின் அரசு சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தி 69% மேல் பின்தங்கிய சமுதாயங்கள் இருக்கிறது என நிரூபித்தால் தான் அந்த ஆபத்து நீங்கும். ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பு இருந்தாலும் அதையும் மீறி சில நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள்.
உயர் சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். எந்த கணக்கெடுப்பும் நடத்தாமல் கொடுக்கப்பட்டது இதனை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. நீதிபதிகள் என்ன தீர்ப்பு கொடுப்பார்கள் என யாருக்கும் தெரியாது. திடீரென இட ஒதுக்கிட்ட ரத்து செய்து விட்டார்கள் என்றால் இதற்கான முழு பொறுப்பும் ஸ்டாலின் ஏற்க வேண்டும். இந்த அவப்பெயர் ஸ்டாலின் அவர்களுக்கு வரக்கூடாது. அப்படி வந்து விட்டால் ஸ்டாலின் பெயர் வரலாற்றில் தமிழ்நாட்டு சமூக நீதிக்கு துரோகம் செய்துவிட்டார் என பட்டம் சூட்டப்படும். எனவே மீண்டும் எச்சரிக்கிறேன் சமூகநீதி காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்கிறேன் என்று கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
பொழுதுபோக்கு
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion