அமைச்சர் பொன்முடி நியாயவாதியா ? நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? கோபத்தின் உச்சியில் அன்புமணி
போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர் - அன்புமணி
ஃபெஞ்சல் புயல்:
ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்டத்தின் இருவேல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கவில்லை எனக் கூறி, திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டிசம்பர் 03ம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் முன்னாள் எம்.பியுமான கவுதமசிகாமணி ஆகியோர் மீது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் சேற்றை வாரி வீசினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அமைச்சர் பொன்முடி, அந்த இடத்திலிருந்து வெளியேறினார்.
பாஜக நிர்வாகி விஜயராணி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராமர் என்கிற ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் அமைச்சர் பொன்முடி சேரை வாரி வீசியதாக திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அமைச்சர் மீது சேற்றை வாரி அடித்த இருவரையும் இரவு நேரங்களில் போலீசார் தொந்தரவு செய்வதாகவும், அவர்களை கைது செய்ய முயற்சி செய்வதாகவும் அவர்கள் இருவரும் வீட்டில் இல்லாத போது அவர்களது குடும்பத்தினரை மிரட்டுவதாகவும் கூறி அவரது உறவினர்கள் நேற்று மாலை 5 அளவில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அரசூர் கூட்டு சாலையில் சுமார் 100 க்கும் மேற்பட்டவர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "வேற நாடா இருந்தா RSS தலைவரை கைது செஞ்சிருப்பாங்க" கொதித்த ராகுல் காந்தி!
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதற்காக வந்த போலீசார், பெண்கள் என்றும் பாராமல் நடு ரோட்டில் தர தரவென்று இழுத்துச் சென்றனர். பெண் காவலர் இல்லாமல் சாலை மறியலில் பெண்களை போலீசார் இழுத்துச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அத்துமீறி பெண்கள் மீது கை வைத்ததாகவும் அங்கிருந்த வாலிபர்களை நாயைப் போல நடுரோட்டில் கை கால்களை பிடித்து இழுத்துச் சென்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இத்தகைய செயல் பல்வேறு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் காவலர்கள் இல்லாமல் பெண்கள் மீது போலீசார் கை வைத்து இழுத்து சம்பவம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
அன்புமணி கண்டனம்:
இந்த நிலையில் , நீதி கேட்டு போராடிய பெண்களை இழுத்துத் தள்ளிய காவலர்கள் வைத்து அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட அரசு என்றும் தமிழகத்தில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர்.
காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது என்றும்உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும்.
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும்.
இதையும் படிங்க: ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது என தெரிவித்துள்ளார்.