TTV Dinakaran: இ.பி.எஸ். - தி.மு.க. இடையே ரகசிய ஒப்பந்தம்..! கோடநாடு வழக்கு தாமதத்திற்கு காரணம் என்ன? - தினகரன் பேட்டி
இபிஎஸ்- திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால் கோடநாடு வழக்கு காலம் தாழ்த்தப்படுவதாக மக்கள் கூறுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி - திமுக இடையே ரகசிய ஒப்பந்தம் இருப்பதால் கோடநாடு வழக்கு காலம் தாழ்த்தப்படுவதாக மக்கள் கூறுவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்து பெரிய கூட்டணி உருவாகும் என்று தெரிவித்தார். ஓ.பி.எஸ்-சபரீசன் சந்திப்பு இயல்பானது. வரும் நாடாளுமன்றத்தேர்தலில் தி.மு.க.விற்கு எதிராக மிகப்பெரிய கூட்டணி உருவாகும் என்றும் தெரிவித்தார்.
ஓபிஎஸ்-சபரீசன் சந்திப்பு
ஐபிஎல் தொடரின் 49வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி -மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. இந்த போட்டியை காண சென்ற முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்தித்ததாக புகைப்படங்கள் வெளியாகின. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த பலர் ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என்று சமூக வலைத்தளங்களிலும், பேட்டிகளிலும் பக்கம் பக்கமாக பேசி வருகின்றனர். இந்நிலையில் நேற்று இவர்கள் இருவரும் தனி அறையில் சந்தித்து நீண்ட நேரம் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயக்குமார் பதிவு
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், நேற்றைய இந்த சந்திப்பின்போது வெளியான புகைப்படம் மற்றும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ”பூனைக்குட்டி வெளியே வந்தது... சபரீசனுடன் ஓ.பி.எஸ் சந்திப்பு..” என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, “தோனிக்கு பதிலாக அவரை கேப்டனாக்க வேண்டும் என்று சிஎஸ்கே நிர்வாகத்துடன் ஓபிஎஸ் சண்டையிட்டு வருகிறார்.” என பதிவிட்டு ஓபிஎஸ்-க்கு பதவி ஆசை உள்ளதாக சொல்லாமல் சொல்லி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார் ஜெயக்குமார்.
கோடநாடு வழக்கு இபிஎஸ்- முதல்வர் ஸ்டாலின் விவாதம்
அண்மையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் - எதிர்கட்சித் தலைவர் இடையே சட்டப்பேரவையில் காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசியதாவது:
பொள்ளாட்சி வழக்கில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், கொடநாடு சம்பவம் என்ன ஆயிற்று? தற்போது நாங்கள் தான் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் ஸ்டாலின்.
இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடித்தது அதிமுக அரசுதான் என்றும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கியது திமுக என்றும் கூறினார். கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தை நாட உள்ளோம் என்றார்.
”கொடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்து நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது, அதிமுக ஆட்சியில் காலம் மெத்தனமாக இருந்தீர்கள், நாங்கள் அந்த வழக்கு குறித்து முறையாக விசாரணை நடத்தி குற்றம் புரிந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார் முதலமைச்சர்”.
”கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்த போது கொரோனா காலகட்டம் அதனால் முறையாக விசாரணை நடத்த முடியவில்லை” என்று பதில் அளித்தார் இபிஎஸ். இதனிடையே பேசிய அமைச்சர் ரகுபதி ”குற்றவாளிகள் தப்ப முடியாதபடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
”கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது அது குறித்து எப்படி பேசலாம்” என்று இபிஎஸ் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நாங்கள் தீர்ப்பிற்குள், விசாரணைக்குள் செல்லவில்லை, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்று தான் கேட்கிறோம். குற்றவாளி சாயன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து 6ஆண்டுகள் ஆகிவிட்டன. சம்பவம் நடந்த உடன் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தியிருந்தால் வழக்கு நிலுவையில் இருந்திருக்காது. ஜெயலலிதா வீட்டில் நடைபெற்ற சம்பவம், அவர் சாதாரண நபர் கிடையாது முதலமைச்சராக இருந்தவர். மிகுந்த கவனத்தோடு விசாரணை நடத்தி உண்மை சம்பவத்தை கண்டுடறிவோம் என்றார்.