தந்தை இறந்த துக்கத்தில் இருந்த தமிழிசை சவுந்தரராஜன்! தொலைபேசியில் அமித்ஷா சொன்ன அந்த வார்த்தை!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் தமிழிசை சவுந்திரராஜனின் தந்தையுமான குமரி ஆனந்தன் கடந்த 8ஆம் தேதி காலமானார். வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் தமிழகம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று குமரி ஆனந்தனின் மகளான தமிழிசை சவுந்திரராஜனின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய தமிழிசை சவுந்திரராஜன், ”என் தந்தை ஒரு தேசியவாதி இறந்த துக்க நேரத்தில் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி உடனே துக்கம் தெரிவித்தார். என் மனதின் அடி ஆழத்தில் இருந்து பிரதமர் மோடிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த செய்தி குறித்து தெரியவந்தவுடன் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது வருத்தத்தை தெரிவித்துக்கொண்டதோடு அல்லாமல் பாரதிய ஜனதா கட்சி உங்களோடு இருக்கிறது என்ற வார்த்தையை சொன்னார்கள்.
அதேபோல், நட்டாஜி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், பன்னீர்செல்வம், செல்வபெருந்தகை ஆகியோரும் இரங்கல் தெரிவித்தனர். பலரும் வந்து வருத்தம் தெரிவித்தனர். அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நாட்டின் உள்துறை அமைச்சரே வீட்டிற்கு வந்திருக்கிறார் என்பதை நினைக்கும் போது என் தந்தை விண்ணில் இருந்து மகிழ்ந்திருப்பார் என்பதை என்னால் எண்ணியே பார்க்க முடியவில்லை” எனத் தெரிவித்தார்.





















