Annabishekam : காண கண் கோடி வேண்டும்.. அன்னாபிஷேகத்தில் காட்சியளித்த சிவபெருமான்..
Aippasi Annabishekam : காஞ்சிபுரத்தில், ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு செவிலிமேடு, கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவலிங்க திருமேனிக்கு 100 கிலோ அன்னத்தால் அன்னாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு
வருட தோறும் வரும் ஐப்பசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிவபெருமான் கோயில்களில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு செய்வது வழக்கம். அந்தவகையில், கோயில் நகரமான காஞ்சிபுரத்தில், செவிலிமேடு ஏரிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத மேற்கு கைலாசநாதர் திருக்கோயிலில் இன்று கைலாசநாதர் சிவலிங்க திருமேனிக்கு முதலில் ஐந்து வகைப் பொருட்களால் அபிஷேகம் செய்து, பின்னர் நன்கு வடித்து ஆறவைத்த 100 கிலோ அன்னத்தைக் கொண்டு அன்னாபிஷேகம் செய்து, அதேசமயம் அப்பம், வடை உள்ளிட்ட பலகாரங்களையும் காய்கறி, கனி வகைகளையும் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்து பின்பு சிறப்பு தீபாராதனைகள் காட்டப்பட்டது.
சாமி தரிசனம்
அன்னாபிஷேகத்தினை முன்னிட்டு அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான பொதுமக்கள் கோவிலுக்கு வருகைப்புரிந்து சிவ பெருமானை வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வணங்கி சென்றனர். மேலும் வந்திருந்த அனைத்து பொதுமக்களுக்கும் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னமும், பிற அன்னதானங்களும் வழங்கப்பட்டது.
அன்னாபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தினை உட்கொண்டால் தீராத நோயும் தீரும், ஆரோக்கியம் கூடும், குழந்தை இல்லையே என ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோயில் ராகு கேது பரிகார ஸ்தளமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னபிஷேகம் நன்மைகள் என்ன ?
ஐப்பசி அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அனைத்திற்கும் ஆதியாக பக்தர்களால் போற்றப்படும் சிவபெருமானுக்கு நடத்தப்படும் இந்த ஐப்பசி அன்னாபிஷேகத்தை பார்ப்பதே மிகவும் புண்ணியம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்றும், கோடி சிவலிங்கங்களை ஒரே நேரத்தில் தரிசித்த புண்ணியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
சிவபெருமானுக்கு இந்த அன்னாபிஷேகத்தில் படைக்கப்பட்டு பிரசாதமாக வழங்கப்படும் அன்னத்தை சாப்பிட்டால் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதீகம் ஆகும். மேலும் தொழிலில் தொடர் தோல்விகள், சிரமத்தை சந்தித்து வருபவர்களுக்கு ஒரு நல்ல விடிவு காலம் பிறக்கும் என்றும், நீண்ட நாட்களாக குடும்ப பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளைச் சந்தித்து வருபவர்களுக்கு மன நிம்மதி உண்டாகும் என்றும், வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுபவர்களுக்கும் முன்னேற்றம் கிடைக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.