OPS on TASMAC: பள்ளி, கல்லூரிகளை மூடியாச்சு... டாஸ்மாக் மட்டும் ஏன்? - தடை கோரும் ஓபிஎஸ்
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலை குறையும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலை குறையும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 74 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தெரிவிக்கபட்டது.
அதேபோல் தலைநகர் சென்னையில் கொரோனா உறுதியாகும் எண்ணிக்கை 13 சதவிகிதம் வரை தொடர்ந்து அதிகரித்துவருவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சென்னையில் இதுவரை பதிவாகாத அளவில் ஒரே நாளில் 3,759 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 721பேர் சிகிச்சை முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து, கொரோனா பரவலை கட்டுபடுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் இரவு ஊரடங்கு மற்றும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தொற்று அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும், தலைவர்கள் சார்பிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், #coronavirus பரவலின் தாக்கம் 5% கீழ் செல்லும் வரையில் தமிழகத்திலுள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட தமிழக அரசு உத்தரவிட வேண்டும். pic.twitter.com/GvnUgzgkYF
— O Panneerselvam (@OfficeOfOPS) January 9, 2022
இந்தசூழலில் தற்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலை குறையும் வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையின்படி பார்த்தால், 1,39,253 பேரின் மாதிரிகளை சோதனை செய்ததில் 10,978 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதாவது கிட்டத்தட்ட 8 சதவீதம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். தி.மு.க.வினுடைய வாதத்தின்படி, 8 சதவீத பாதிப்பு உள்ள இந்நிலையில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், மதுக்கடைகள் தமிழ்நாடு முழுவதும் திறந்து வைக்கப்பட்டு இருக்கின்றன. கொரோனா தொற்று வேகமாகப் பரவிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பக்கம் பள்ளிகள், கல்லூரிகளை மூடவும், வழிபாட்டுத்தலங்களை வாரத்தில் மூன்று நாட்கள் மூடவும் உத்தரவிட்டுவிட்டு, மறுபக்கம் மதுக்கடைகளை திறந்து வைப்பது என்பது கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்த உதவாது. மாறாக, தொற்றினை அதிகரிக்க வழிவகுக்கும். கடந்த ஐந்து நாட்களாக எடுக்கப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் பார்த்தால், தற்போதுள்ள எட்டு சதவீத பாதிப்பு என்பது ஒரு வாரத்தில் இரட்டிப்பாகும் சூழ்நிலை உருவாக வாய்ப்புள்ளது.
பிப்ரவரி மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். ஏனெனில் அந்த அளவுக்கு கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. உச்சத்தை ஓரளவுக்கு தளர்த்த வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை உடனடியாக மூட உத்தரவிடுவதுதான் உத்தமமாக இருக்கும். அதை இந்த அரசு செய்ய வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்களும், ஆர்வலர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, கொரோனா மூன்றாவது அலையை ஓரளவுக்காவது தடுக்கும் வகையில், கொரோனா பரவலின் தாக்கம் 5 விழுக்காட்டிற்குக் கீழ் செல்லும் வரையிலாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டுமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்