AIADMK: ’மிக மோசமான ஏமாற்று வேலை’.. அமைச்சர் தங்கம் தென்னரசுவை கடுமையாக விமர்சித்த அதிமுக!
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசவில்லை என கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுகவின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'இந்த விடியா முதல்வரின்' ஆட்சியில் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை யாரும் பொய் பிரச்சாரம் செய்ய தயங்குவதில்லை, மணிப்பூர் குறித்து எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் நேற்றே தனது கடும் கண்டனங்களை தெரிவித்துவிட்ட நிலையில், எதிர்கட்சித் தலைவர் மணிப்பூர் குறித்து பேசவே இல்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருப்பது மிக மோசமான ஏமாற்று வேலை ! இந்த சமூகவலைதள யுகத்தில் கோமாளித்தனமானதும் கூட…!
நடப்பது பொம்மை முதல்வரின் சர்க்கஸ் அரசு தான் என்பதை நித்தம் ஒரு அமைச்சர் உறுதி செய்வதற்கு நன்றி! அது சரி…, மணிப்பூர் குறித்து கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினாரா என கேள்வி கேட்பவர்கள், மேகதாது அணை கட்ட ஆயத்த பணிகளை செய்து கொண்டிருக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசையோ , தன் பக்கத்தில் உட்கார்ந்து மகிழ்ந்து குலாவிய
கர்நாடக துணை முதல்வர் டி.கே.ஷிவக்குமாருக்கு எதிராகவோ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய்திறக்காதது ஏன் என்று கேள்வி கேட்பார்களா??” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன நடந்தது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்தார். அப்போது, ‘மணிப்பூர் விவகாரம்’ தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘உலகளாவிய அளவில் மணிப்பூர் கலவரம் கவனத்தை பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக தெளிவான கருத்தை கூறியுள்ளது, மேலும் முதலமைச்சரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக உறுப்பினர்கள் இவ்விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்துள்ளார்கள்’ என தங்கம் தென்னரசு கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், ‘எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக மணிப்பூர் விவகாரம் தொடர்பாக இதுவரை வாய் திறக்கவில்லை. தாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்கிறார். ஆனால் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக அவர் பேசாதது அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலப்பட்டுள்ளதை காட்டுகிறது’ என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.