AIADMK | நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு! அரசுக்கு ஒத்துழைப்பு - முதல்வருக்கு கடிதம் எழுதிய ஓபிஎஸ்!
நீட் விலக்கிற்கு அதிமுக ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முதலைமைச்சர் முக ஸ்டாலினுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. இந்த மசோதவை கடந்த 1ஆம் தேதி ஆளுநர் சட்டமன்றத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளார். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இன்று காலை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் அதிமுக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்தக் கூட்டத்திற்கு பிறகு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், "நீட் விலக்கிற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அதிமுக ஆதரவு அளிக்கும். மேலும், நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக உள்ளது என்றும், அதிமுகவின் கருத்துகள் பேரவையிலும் கடந்த ஜனவரி 8 ம் தேதி நடந்த கூட்டத்திலும் எடுத்துரைக்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த நீட் அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், "2007ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பொறியில் மாணவர் சேர்க்கை தொடர்பாக ஒரு மசோதவை இயற்றியது. அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார். அந்தச் சட்டம் நுழைவுத் தேர்வை ரத்து செய்யும் தமிழ்நாட்டு அரசின் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாக இல்லை என்று அப்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோன்று தற்போது நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கு மசோத சட்டமன்றத்தில் இயற்றப்பட்டது. அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தோம். அதை நீண்ட நாட்கள் ஆளுநர் கிடப்பில் வைத்திருந்தார். அரசியல் சாசனப்படி ஆளுநர் தன்னுடைய கடமையை செய்யவில்லை. 142 நாட்களுக்கு பிறகு ஆளுநர் அந்தச் சட்டத்தை தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்” எனக் கூறியுள்ளார். இன்று காலை நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக, அதிமுக, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கவில்லை. ஏற்கெனவே பாஜக நீட் தேர்விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: திமுக அரசின் 8 மாத சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை