Local Body Election | திமுக அரசின் 8 மாத சாதனைகளை சொல்லி வாக்கு கேட்போம் - அமைச்சர் செந்தில் பாலாஜி நம்பிக்கை
ஸ்டாலின் முதல்வராகி 8 மாத காலத்தில் செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை எடுத்துக் கூறி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்குகளை கேட்போம் - கரூரில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேச்சு.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 47 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பழனிச்சாமியை ஆதரித்து கோடங்கிபட்டியில் தனது பிரச்சாரத்தை துவங்கினார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னதாக வாக்கு சேகரிக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பொன்னாடை போர்த்தியும், பட்டாசு வெடித்தும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்பகுதியில் உள்ள பட்டாளத்தம்மன் சாமியை தரிசனம் செய்து தனது பிரச்சாரத்தை துவக்கினார். திமுக ஆட்சி அமைத்து கொண்டு வந்த திட்டங்கள், கரூர் மாவட்டத்திற்கு அறிவிக்கப்பட்ட 2000 கோடி திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்து கூறி வாக்குகளை சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, நகர்புற உள்ளாட்சி தேர்தலில் முதல்வரின் ஆசியுடனும், கூட்டணி கட்சியினரின் ஆதரவுடனும் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்காக இன்று 11 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு இருப்பதாகவும், கரூர் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் 42 வார்டுகளில் திமுக நேரடியாகவும், மீதமுள்ள வார்டுகளில் கூட்டணி கட்சியின் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்று செயல்படுத்தப்பட்ட சிறப்பு திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து வாக்குகளை சேகரிப்போம் என்றும், கரூர் மாவட்டத்தில் புதிய பேருந்து நிலையம், கூட்டு குடிநீர் திட்டம், அரசு வேளாண் கல்லூரி, 2 தடுப்பணைகள் என 2000 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் வழங்கியுள்ளார். அச்சாதனைகளை எடுத்துரைத்து வாக்குகளை சேகரிப்போம் என்றார். மேலும், கரூர் மேற்கு நகரத்திற்கு உட்பட்ட 47, 48, 44, 45 , 46, 37, 43, 42, 41, 36 ஆகிய ஆகிய வார்டுகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கினார்.
வழியெங்கிலும் காத்துக்கொண்டிருந்த திமுக நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையால் விழாக்கோலம் கண்டது கரூர் பகுதி. வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் தனது திமுக கட்சியின் வேட்பாளரை ஆதரித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மாலை தொடங்கி இரவு வரை 9-வார்டு பொதுமக்களை சந்தித்து தேர்தல் பரப்புரையை சுறுசுறுப்பாக மேற்கொண்டார்.
இந்த முதல் கட்ட பிரச்சாரத்தில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தை உள்ளிட்ட கட்சி மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளாத நிலையிலும் தனது முதல் கட்ட பிரச்சாரத்தில் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, மாநில சட்டத் துறை இணைச் செயலாளர் மணிராஜ், மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன், கிழக்கு நகர பொறுப்பாளர் சுப்பிரமணியன், மத்திய கிழக்கு நகர பொறுப்பாளர் ராஜா, மத்திய நகர பொறுப்பாளர் எஸ்பி கனகராஜ் ,நகர பொறுப்பாளர் அன்பரசு உள்ளிட்ட நகர பொறுப்பாளர்களும், கோடங்கிபட்டி, காளியப்பனூர், அசோக் நகர், தாந்தோன்றிமலை, சுங்ககேட், ராயனூர் 4 ரோடு, டி.செல்லாண்டி பாளையம், திருமாநிலையூர் உள்ளிட்ட பகுதியில் போட்டியிடும் 10-வார்டு வேட்பாளர்களும் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும்
48- வார்டு கொண்ட மாநகராட்சி தேர்தலில் தனது முதல் கட்ட பிரசாரத்தை தொடங்கிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.