அக்னிபத் மோசடி திட்டம், கனவை நாசமாக்கும் திட்டம்.. - தொல்.திருமாவளவன் எம்.பி..,
கீழ்வேளூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்
அக்னிபத் மோசடி திட்டம் இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும் ஒரு திட்டம். அதனால்தான் பாஜக அணியைத் தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்: அதிமுகவை பாஜக தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது ; கீழ்வேளூரில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பேசியுள்ளார்
காங்கிரஸ் கட்சியின் நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜின் தாயாரின் படத்திறப்பு விழா கீழ்வேளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. படத்திறப்பு விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கௌதமன், நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறுகையில் ;
”தமிழக அரசின் ஒப்புதல் இன்றி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு அனுமதிக்க கூடாது எனவும், டெல்லியில் காங்கிரஸ் கட்சி கூடியுள்ள குடியரசுத் தலைவர் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு பெரும். அதில் இதுவரை கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர்கள் குடியரசுத் தலைவராக முடியாத நிலையில், இந்த முறை எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு கிறிஸ்தவரை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்பதை விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தும்” என்றார்.
மேலும் ”அக்னிபத் திட்டம் மோசடி திட்டம் எனவும், இளைஞர்களின் எதிர்கால கனவை நாசமாக்கும் ஒரு திட்டம். அதனால்தான் பாஜக அணியைத் தவிர மற்ற அனைவரும் எதிர்க்கின்றனர்” என்றார்.
”ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக சுதந்திரமாக எந்த செயலும் செய்ய முடியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்கு ஆண்டுகள் ஆட்சிக் காலத்தில் இருந்த அதிமுக பாஜகவின் முழு கட்டுப்பாட்டில் இருந்தது. பாஜக அதிமுகவை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என திருமாவளவன் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்