(Source: ECI/ABP News/ABP Majha)
முப்பதாண்டுகளுக்கு பின் உயர்த்தப்பட்ட வரம்பு… அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கான கல்வி முன்பணம் உயர்வு!
அந்த தொகை தற்போதைய மதிப்புக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டிய நிலை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது ஒரு வழியாக மாற்றப்பட்டு செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் அறிவிக்கப்பட்டதில் இருந்து உயர்த்தப்படாத நிலையில், 30 ஆண்டுகளுக்கு பின்னர், உயர்த்தி வழங்குவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
கல்வி முன்பணம் உயர்த்தி அரசாணை
கல்லூரி அல்லது பல்தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயிலும் அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி செலவை ஈடுகட்ட உதவும் வகையில் கல்வி முன்பணம் என்ற வட்டியில்லா முன்பணம் வழங்கும் திட்டத்தை 1979 ஆம் ஆண்டு அரசு அறிமுகப்படுத்தியது. அதில் அரசு ஊழியர்களின் ஒரு மாத அடிப்படை சம்பளம் அல்லது கல்வி முன்பணம் இதில் எது குறைவோ அந்த, வரம்பின் அடிப்படையில் முன்பணம் பெறலாம் என அரசாணை இருந்தது. அப்போதைய பண மதிப்பிற்கும், சம்பளத்திற்கும் ஏற்ப வகையில் நிர்ணயிக்கப்பட்ட அந்த தொகை, ஆண்டுகள் ஓட ஓட மிகவும் குறைந்த தொகையாக மாறி உள்ளன. அதனால் அந்த தொகை தற்போதைய மதிப்புக்கு ஏற்றார் போல மாற்றி அமைக்க வேண்டிய நிலை பல ஆண்டுகளாக இருந்து வந்தது. தற்போது ஒரு வழியாக மாற்றப்பட்டு செய்தியை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு.
முப்பதாண்டுகளுக்கு பிறகு
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில், "மேற்கண்ட அரசாணை வெளியிடப்பட்டு முப்பதாண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு. அவர்களது குழந்தைகள் உயர்கல்வி பெறுவதற்கு வழங்கப்பட்டு வந்த கல்வி முன்பணத் தொகையானது கீழ்கண்ட நிபந்தனைகளுடன் தற்போது இவ்வரசால் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. இந்த உயர்த்தப்பட்ட கல்வி முன்பணத் தொகை 2023-2024 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்படும்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு தொகுதிகளாக ஊழியர்கள்
மேலும் அந்த செய்திக்குறிப்பில் இது குறித்த மேலும் சில தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஊழியர்களை நான்கு தொகுதிகளாக பிரிதுள்ள அரசு, தொகுதி C மற்றும் D ஊழியர்களுக்கு ஒரு மாத அடிப்படை ஊதியத்திற்கு சமமான தொகை அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது. தொகுதி A மற்றும் B அலுவலர்களுக்கு ஒரு மாத அடிப்படைஊதியத்தில் 50% அல்லது கீழே பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளில் எது அதிகமோ அத்தொகை அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களின் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான கல்வி முன்பணம் உயர்த்தி வழங்குதல் குறித்த பத்திரிக்கை செய்தி#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/9QmcEG2Nd1
— TN DIPR (@TNDIPRNEWS) August 24, 2023
உயர்த்தப்பட்டுள்ளது வரம்புகள்
தற்போது மாற்றியமைக்கப் பட்டுள்ள வரம்புப்படி, அரசு ஊழியர்களின் குழந்தைகள் தொழில் முறைக் கல்வி பயிலும் நிலையில், அவர்களுக்கு வரம்பு ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு இந்த வரம்பு ரூ. 2,500 ஆக இருந்தது. கலை மற்றும் அறிவியல் அல்லது பல்தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு வரம்பாக ரூ. 25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பு கலை மற்றும் அறிவியல் படிப்பிற்கு ரூ. 2000 ஆகவும், பல்தொழில்நுட்பம் படிப்பவர்களுக்கு ரூ.1000 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.