கரூர்: தண்ணீர்ல சிக்கல்.. கொடியிலேயே கருகும் வெற்றிலைகள்.. பாழாகும் சாகுபடி! வேதனையில் விவசாயிகள்!
வெற்றிலை இலைக்கருகல் நோய் (தீச்சல்) நோயால் சுமார் 60 ஏக்கரில் சாகுபடி செய்த வெற்றிலை சாகுபடி நாசமானது.
கரூர் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம், புங்கோடை, சேமங்கி, முத்தனூர், கோம்புபாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப் பாளையம், என்.புகழூர் உள்ளிட்ட பகுதியில் வெள்ளை பச்சைகொடி, கற்பூரம் ஆகிய ரக வெற்றிலைகள் சாகுபடி செய்யப்படுகிறது. புகழூர் வாய்க்கால் மூலம், இப்பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரத்தில் கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டது. தண்ணீரில் ஏற்பட்ட மாசு, நிலத்தின் தன்மை மாறுபாடு ஆகியவற்றால் வெற்றிலை சாகுபடி நாளடைவில் படிப்படியாக குறைந்து, 150 ஏக்கர் முதல், 200 ஏக்கராக மாறி விட்டது. வாய்க்காலில் வரும் தண்ணீர் மாசடைந்து இருப்பதால், வெற்றிலையில் இலைக்கருகல் நோய் (தீச்சல்) தாக்கம் பரவி வருகிறது. ஒரு ஏக்கர் நிலத்தில், 1,500 கவுளி முதல், 3,000 கவுளி வரை வெற்றிலை மகசூல் கிடைக்க வேண்டிய இடத்தில், நோய் தாக்கம் காரணமாக, 1,000 கவுளி முதல், 2,000 கவுளி வரை தான் வெற்றிலை கிடைக்கும் சூழ்நிலை ஏற்படுள்ளது. இதனால், வெற்றிலை விவசாயம் செய்ய முடியாமல் நாசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
புகழூர் வெற்றிலை விவசாயிகள் சங்க செயலாளர் ராமசாமி கூறியதாவது - வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரத்தில், வெள்ளை பச்சைக்கொடி, கற்பூரம் ஆகிய இரண்டு ரக வெற்றிலை சாகுபடி செய்யப்படுகிறது. அகத்திகால் விதை விதைப்பு செய்வோம். மூன்று மாதங்களில் வெற்றிலை அறுவடைக்கு தயாராகி விடும். ஒரு கிலோ அகத்திகால் விதை 250 ரூபாய். கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், ஒருமுறை வெற்றிலை சாகுபடி செய்தால், ஐந்தாண்டுகள் வரை அறுவடை செய்வோம்.
கடந்த காலங்களில். சாகுபடியான வெற்றிலையை வட மாநிலங்களுக்கு, தினசரி, இரண்டு லோடு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது, தண்ணீரில் ஏற்பட்ட மாசு காரணமாக, வெற்றிலை சாகுபடி குறைந்து விட்டது. ஒரு ஏக்கர் வெற்றிலை சாகுபடி செய்ய, ஐந்து லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. அடிப்படை செலவு அதிகரிப்பு, தண்ணீர் பிரச்னையால், இப்பகுதியில், 150 ஏக்கர் முதல், 200 ஏக்கர் வரை வெற்றிலை சாகுபடி உள்ளது. வட மாநிலங்களுக்கு, வாரத்தில், இரண்டு லோடு வெற்றிலை செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.
கொடுமுடி, புகழூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் சாக்கடை கழிவுநீர் வாய்க்காலில் கலந்ததால், தண்ணீர் மாசடைந்து விட்டது. சுத்தமான தண்ணீர் இருந்தால் தான் வெற்றிலை வளர்ச்சி அடையும். மாசடைந்த தண்ணீரால் பூஞ்சான், இலைக்கருகல் உள்ளிட்ட நோய் தாக்கம் ஏற்படுகிறது. நோய் தாக்கம் காரணமாக, வெற்றிலை மகசூல் படிப்படியாக குறைந்து விட்டது. வேளாண்மை துறையினர் நோய் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வெற்றிலையை விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். வெற்றிலை விவசாயிகளைக் காப்பாற்றவும், வெற்றிலை சாகுபடியை மேம்படுத்தவும் வேலாயுதம்பாளையம், புகளூர் பகுதிகளில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், மதிப்பு கூட்டுப் பொருளாக வெற்றிலையை மாற்றி மருத்துவ ரீதியில் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும் முறைகளையும், மதிப்பு கூட்டுப் பொருளாக உருவாக்கவும், பயன்படுத்த முடியும் என இப்பகுதி விவசாயிகளும், வெற்றிலை விவசாய அமைப்புகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வெற்றிலை விலை-வெள்ளை பச்சைக் கொடி ரகம் ஒரு லோடு 5,500 ரூபாய்க்கும், கற்பூரம் 4,500 ரூபாய்க்கும் விற்கப்பட்டது ஒரு லோடு என்றால் 104 கொத்துகள், இதில் ஒவ்வொரு கொத்தும் 120 வெற்றிலைகள் இருக்கும். கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இப்போது 3,500 மற்றும் 2,500 குறைந்துவிட்டது என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.