Victoria Gowri: எழுந்த விமர்சனங்கள்.. உச்சநீதிமன்றத்தில் வழக்கு.. நீதிபதியாக பதவியேற்றார் விக்டோரியா கௌரி..!
வழக்கறிஞர் விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.
வழக்கறிஞர் விக்டோரியா கௌரி சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார். இவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விக்டோரியா கௌரியை தொடர்ந்து பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதியும் கூடுதல் நீதிபதியாக பதவியேற்று கொண்டனர்.
View this post on Instagram
விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி:
உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதி விக்டோரியா கௌரி நியமனத்துக்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மூத்த வழக்கறிஞர் ராஜு ராமச்சந்திரனின் மனுவை ஏற்க மறுத்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்படும் முன் ஓராண்டுக்கு விக்டோரியா செயல்பாடு பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
விக்டோரியா கவுரி நியமனத்திற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.
வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது மனுதாரர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு தெரியாமலா இருக்கும் என கேள்வி எழுப்பினர்.
நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா மற்றும் பி.ஆர். கவாய் நாங்கள் மாணவர்களாக இருக்கும் போது அரசியல் கட்சிகளுடன் தொடர்பில் இருந்திருக்கிறோம் ஆனால் அரசியல் பார்வை வெளிப்படுத்தியது இல்லை என குறிப்பிட்டனர். அதே போல் விக்டோரியா கௌரியும் இருக்கலாம் அல்லவா என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த வழக்கறிஞர் பல நீதிபதிகள் கட்சியில் இருந்தாலும் அரசியல் பார்வையை வெளிப்படுத்தியதில்லை, ஆனால் விக்டோரியா கௌரி குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிராக வெறுப்பு பேச்சு மற்றும் கருத்துக்களை தெரிவித்துள்ளார் என கூறினார்.
மேலும் வழக்கறிஞர் ஆனந்த க்ரோவர் பேசுகையில், ”இப்படி பேசிவிட்டு அதே அரசியல் சாசனத்தின் மீது ஆணையிட்டு பதவி ஏற்பது ஏற்புடையது அல்ல. அவர் அடிப்படை தகுதியை இழந்து விட்டார்” என குறிப்பிட்டார்.
பிசிஐ கரிமன் மனன் குமார் மிஸ்ரா,” பார் கவுன்சில்களுடன் நாங்கள் சரிபார்த்தோம். விக்டோரியா கௌரி மீது முறைகேடு புகார்கள் எதுவும் இல்லை” என குறிப்பிட்டார்.
அதற்கு பதிலளித்த நீதிபதிகள், நன்கு அலசி ஆராய்ந்துதான் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தை எப்படி ஒப்பிடலாம் என கேள்வி எழுப்பினர். வழக்கு விசாரணையின் போது விக்டோரியா கவுரி சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் வழக்கறிஞராக பதவி ஏற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கௌரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.