EPS ADMK: ஏது பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா? அதெல்லாம் கிடையாது - எடப்பாடி பழனிசாமி தடாலடி விளக்கம்
EPS ADMK BJP: பாஜகவிற்கு ஆட்சியில் எல்லாம் பங்கு கிடையாது என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

EPS ADMK BJP: பாஜக உடன் கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறவில்லை என, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக வெளிநடப்பு:
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது, அதிமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் வழங்கப்பட்டது. இன்று சட்டப்பேரவை அலுவல் தொடங்கியதுமே, தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வலியுறுத்தினர். ஆனால், தீர்மானம் நீங்கள் கொடுத்துள்ளீர்கள். அது பரிசீலனையில் உள்ளது. இன்றைக்கு மற்ற அலுவல்கள் இருப்பதால், அதை விவாதத்திற்கு எடுக்க முடியாது” என அப்பாவு கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக உறுப்பினர்கள், எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
”அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லை”
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, கே.என். நேரு மற்றும் பொன்முடி ஆகியோர் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. இந்து மதம் மற்றும் பெண்கள் தொடர்பாக அமைச்சர் பொன்முடி அநாகரீகமாக பேசியுள்ளார்” என கண்டித்தார்.
பாஜகவிற்கு ஆட்சியில் பங்கா?
தொடர்ந்து பாஜக உடனான கூட்டணியில் அதிகாரத்திலும் பங்களிக்கப்படுகிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்தபோது, “ கூட்டணியில் அங்கம் வகிப்போம் என்று கூறினோம்; கூட்டணி ஆட்சி என்று கூறவில்லை; நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் திமுகவுக்கு ஏன் எரிச்சல்? திமுகவுக்கு பயம். தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி என்று அமித்ஷாவும் கூறவில்லை; டெல்லிக்கு பிரதமர் மோடி, தமிழ்நாட்டுக்கு எடப்பாடி பழனிசாமி என்று அமித் ஷா கூறினார். பாஜக - அதிமுக கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்றே அமித் ஷா குறிப்பிட்டார். பாஜக உடனான கூட்டணி என்பது திமுகவிற்கு எதிரான வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்கானது மட்டுமே. பாஜகவுடன் கூட்டணி மட்டுமே கூட்டணி ஆட்சி கிடையாது. தேர்தலுக்கு ஒன்னும் ஓராண்டு உள்ளதால் அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் சேரும்” எனவும் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார்.

