(Source: ECI/ABP News/ABP Majha)
எடப்பாடி பழனிசாமியின் கார் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம்: அமமுகவினர் மீது வழக்குப்பதிவு!
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அதிமுக - அமமுகவினர் இடையே நேற்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று அமமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா நினைவிடத்தில் நேற்று அதிமுக - அமமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்நிலையில், இன்று அமமுகவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக, நேற்று டிடிவி தினகரன் வெளியிட்ட ட்விட்டில், “எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன். பழனிசாமி & கம்பெனியினர் போல கட்சியினுடைய தலைமை அலுவலகத்திலேயே தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்களை ஏவி, கட்சித் தொண்டர்களைத் தாக்கும் ஈன புத்தி எங்களுக்கு கிடையாது. அதுவும் நாங்கள் போற்றி வணங்குகின்ற பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவரும், இதயதெய்வம் அம்மா அவர்களும் துயில் கொள்ளும் புனித இடத்தில் இப்படியெல்லாம் நடந்து கொள்வதற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்கள் இவர்களைப் போல மனசாட்சி துளியும் அற்ற துரோக கும்பல் அல்ல. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஜனநாயக ரீதியாகவே அரசியலை எதிர்கொள்ளுமே தவிர, வன்முறையில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை கிடையாது. இன்றைய தினம் அம்மா அவர்களின் நினைவிடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்த தமிழக காவல்துறையினருக்கே இந்த உண்மை தெரியும்” எனத் தெரிவித்திருந்தார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை அதிமுக, அமமுக தொண்டர்கள் மற்றும் சசிகலா ஆதரவாளர்கள் தமிழகம் முழுவதும் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். அந்தவகையில், மெரினாவில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக ஏராளமான அதிமுகவினர், அமமுகவினர், சசிகலா ஆதரவாளர்கள் காலை முதலே குவிந்த வண்ணம் இருந்தனர். காலை 10.15 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மற்றும் எம்.எல்.ஏக்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காரில் ஏறி கிளம்பும்போது, எடப்பாடி பழனிசாமி கார் மீது செருப்பு வீசப்பட்ட பரபரப்பு காட்சிகள் வெளியானது.
எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்னுடைய தூண்டுதலில் தொண்டர்கள் தாக்குதல் நடத்த முயன்றதாக அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்திருப்பதாக தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தேன். (1/4)
— TTV Dhinakaran (@TTVDhinakaran) December 5, 2021