Seeman: "சீமான் மாமா.. எனக்காக இதை மட்டும் செய்யுங்க..." கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்த நடிகை விஜயலட்சுமி..! என்ன நடந்தது?
நான் தான் முதல் மனைவி என உரிமை கொண்டாடி சண்டையெல்லாம் எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டியது அன்பு தான் என நடிகை விஜயலட்சுமி கண்ணீர் மல்கப் பேசியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் மீது கடந்த ஆண்டுகளில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தவர் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி:
கன்னட நடிகையான விஜயலட்சுமி, 2001ஆம் ஆண்டு நடிகர் விஜய் -சூர்யா நடித்த ஃப்ரெண்ட்ஸ் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார். தொடர்ந்து தமிழ், கன்னட மொழி படங்களில் நடித்து வந்த விஜயலட்சுமி, சீமான் இயக்கத்தில் வெளியான ‘வாழ்த்துகள்’ படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை பாலியல்ரீதியாக பயன்படுத்தி விட்டு, தன்னை ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், அவருடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோக்களைப் பகிர்ந்தும், தனக்கு நியாயம் கோரியும் இணையத்தில் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பைக் கிளப்பி வந்தார்.
வைரலாகும் வீடியோ:
மேலும் சீமான் மீது காவல் நிலையத்திலும் முன்னதாக விஜயலட்சுமி புகார் அளித்த நிலையில், நாம் தமிழர் கட்சியினரின் கடும் கோபத்துக்கு அவர் ஆளானார். அதேபோல் முதலமைச்சர் ஸ்டாலின் வரை நியாயம் கோரியும் விஜயலட்சுமி வீடியோ பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து சீமானைத் திட்டி வீடியோ பகிர்ந்து வரும் விஜயலட்சுமிக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இணையத்தில் மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், கடந்த மே 15ஆம் தேதி விஜயலட்சுமி பேசியதாக வெளியாகியுள்ள வீடீயோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
சீமான் மாமா:
“இன்று காலை நான் பகிர்ந்த வீடியோ பார்த்து கர்நாடகாவில் இருந்து பலரும ஃபோன் செய்து என்னை விசாரித்து வருகின்றனர். இது என்ன பெரிய கச்சத்தீவு பிரச்னையா, இல்லை தீர்க்க முடியாத பிரச்னையா...உங்களுக்கு எப்போது நியாயம் கிடைக்கப்போகிறது எனக் கேட்கிறார்கள்.. நான் சீமான் மாமா என்று தான் பேசப்போகிறேன், அப்படி சொல்லும்போது தான் சீமானுக்கு நினைவு வரும். நான் நிம்மதியா என் வாழ்க்கையில் தூங்கி 12 வருஷம் ஆச்சு சீமான் மாமா.என் அக்கா என்ன மாதிரியான நிலையில் இருக்கிறார் என உங்களுக்குத் தெரியும்.
உங்களை ரீச் செய்ய வீடியோ பகிர வேண்டி உள்ளது. 2 வருஷம் நான் உங்களுடன் வாழ்ந்த போது நீங்கள் விதவிதமான கனவுகள், நம்பிக்கைகள எனக்கு கொடுத்தீங்க. அப்படியே என்னை பைத்தியமாக மாற்றிவிட்டு நடுரோட்டில் விட்டுச் சென்றீர்கள், இப்போது செல்வம் என்பவர் வந்து, ”உங்கள் மாமா அவர், நீங்கள் தான் முதல் மனைவி” எனக்கூறி என்னை மீண்டும் உங்கள் மீது பைத்தியாமாக்குகிறார். நான் என்ன செய்வதென்று எனக்கு தெரியவில்லை. புகார் தெரிவிக்கபோனால் திட்டு விழுகிறது, இல்லையென்றால் வேறு மாதிரி திட்டு விழுகிறது. வாங்காத 2 கோடியை வாங்கினேன் என்று என்னை சிலர் கொச்சையாகப் பேசுகிறார்கள். இதற்கெல்லாம் இன்றைக்கு முடிவெடுங்கள் சீமான் மாமா.
கஷ்டப்படுகிறேன்:
நான் அழுதுகொண்டே தான் இந்த வீடியோவிலும் பேசுகிறேன், என்னால் தூங்கவே முடியவில்லை. என் அக்காவை வைத்துக் கொண்டு நான் எவ்வளவு கஷ்டப்படுகிறேன் என கர்நாடகா மக்களுக்குத் தெரியும். எத்தனை நாள் இப்படியே பொதுவெளியில் இந்த விஷயத்தை அசிங்கப்பட விடுவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என பேசி சரிசெய்து போக வேண்டும். கர்நாடக மக்கள் 5 லட்சம் கொடுத்து என்னை வீட்டில் வைத்து காப்பாற்றினார்கள். அவமானப்பட்டு நான் எவ்வளவு நாள் வீடியோவில் பேச வேண்டும் சீமான் மாமா?
விஜயலட்சுமி எத்தனை நாள்கள் இன்னும் பேச வேண்டும்? மக்கள் அதை தான் கேட்கிறார்கள். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு ஒரு மனைவி இருக்கிறார். ஒரு குழந்தை உள்ளது. ஒரு ஒரு வீடியோவிலும் நான் கயல்விழியை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள், பிரபாகரன் பாப்பாவை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தே இல்லையா? நான் எங்காவது என்னுடன் வந்து வாழுங்கள் என்று கேட்டேனா? கயல்விழியின் மீது எனக்கு பொறாமை இல்லை.
என்னால் முடியவில்லை:
விட்டுக்கொடுத்து நீங்கள் நன்றாக வாழவேண்டும் என நினைக்கும் பெண் நான். திமுக காரர்கள் உங்களை ஒரு மாதிரி திட்டிக் கொண்டிருக்கிறார்கள். வேறு கட்சியினர் ஒரு மாதிரி திட்டுகிறார்கள். நான் இன்னும் எத்தனை நாள் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்? எனக்கு முடியவில்லை.
நான் தான் முதல் மனைவி என உரிமை கொண்டாடி சண்டையெல்லாம் எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டியது அன்பு தான். கர்நாடக மக்களுக்கு என் நிலை புரிகிறது. சிலருக்கு தெரியவில்லை, அதனால் தான் நான் கண்ணீருடன் பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு சக்தி இல்லை. பண உதவி என் அக்காவுக்கு நீங்கள் செய்கிறீர்கள், தாராளமாக செய்யுங்கள்.
நான் எல்லா வழியிலும் நல்லவள் எனத் தெரியும்போது ஏன் என்னை குழப்புகிறீர்கள்? எப்படி எல்லா அரசியல் விஷயத்தையும் நீங்களே முன் வந்து தீர்க்கிறீர்களோ அதேபோல் தயவு செய்து நீங்களே முன்வந்து இந்தத் தனிப்பட்ட விஷயத்தை தீர்த்தால் தான் சரியாக இருக்கும் சீமான் மாமா.
நல்லா வாழுங்கள்:
நீங்கள் என் கணவராக வாழ வேண்டியதில்லை. தாராளமாக என் தங்கை கயல்விழியுடன் நல்லா வாழுங்கள். என் கண்ணீரில் இன்னொரு பெண் வாழட்டும், ஆனால் நான் இன்னொரு பெண்ணின் கண்ணீரில் வாழ மாட்டேன். அந்தப் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் என்னை யாராவது கொச்சைப்படுத்தும்போது அதைத் தீர்க்க வேண்டியது உங்கள் கடமை. தயவு செய்து தீர்த்து வையுங்கள். அரசியல் கட்சிக்காரர்கள் உங்களை கொச்சைப்படுத்துகிறார்கள்.
உங்கள் மேல் விழும் அடி என் மேல் விழுகிறது. நான் மாமா என ஏன் சொன்னேன் என்றால் அப்போது தான் நான் ரொம்ப நொந்துபோல் பேசுகிறேன் என உங்களுக்குப் புரியும். அம்மாவும் அக்காவும் எனக்கு ஆறுதலுக்கு கிடையாது. விஜயலட்சுமியின் பிரச்னையை சீமானால் தான் சரி செய்ய முடியும். நாம் தமிழர் கட்சி என்னைத் திட்டாமல், தமிழ்நாட்டுக்கு மீண்டும் வந்து ஒரு குடும்பமாக வாழ மாட்டோமா என ஆசைப்படுகிறேன். நான் உங்களுக்கு நல்லது செய்வது போல் எனக்கும் அதை செய்துகொடுங்கள்” என விஜயலட்சுமி பேசியுள்ளார்.
முன்னதாக இதேபோல் சீமானை தான் அதிகம் நேசிப்பதாக விஜயலட்சுமி பேசும் வீடியோ ஒன்றும் வெளியானது. இந்த வீடியோக்களின் உண்மைத்தன்மை பற்றி தெரியாத நிலையில், இணையத்தில் இந்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.