முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் குற்ற வழக்கு : உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..
இந்த மனு மீது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 6 வார காலத்தில் பதில் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது
முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் தனை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக உறவுகொண்டு பின்னர் கருக்கலைப்பு செய்ததுடன், அந்தரங்க புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியதாக நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
புகாரை விசாரித்த அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் 8 பிரிவுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து பெங்களூருவில் வைத்து 2021 ஜூன் 20 ஆம் தேதி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஆனால் அங்கு அவருக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்து உத்தரவிட்டார்.
இதனை அடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜூலை 7 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் நடிகை சாந்தினி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அம்மனுவில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஜாமீன் வழங்கிய போது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை பாதிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளை சட்டத்திற்கு அப்பாற்பட்டு குறிப்பிட்டுள்ளனர். விசாரணையை பாதிக்கும் வகையில் நீதிமன்றத்தால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை நீக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமினை ரத்து செய்யவும் வலியுறுத்தியிருந்தார்.
இதைப்போல் வழக்கின் விசாரணையை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் நடிகை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என் வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்ததது. நடிகையின் சார்பில் ஆஜனான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் குமார் கண்ணா முன்னாள் அமைச்சர் மீது நடிகை கொடுத்துள்ள புகார் குறித்தும் அதிலுள்ள முக்கியத்துவம் குறித்தும் நீதிபதிகளிடம் விவரித்து அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த மனு மீது முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டன் 6 வார காலத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.