Khushbu: 'தமிழு'க்கு பதில் 'தமில்' என பதிவிட்ட குஷ்பு..! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்..
'தமிழ்' என பதிவிடுவதற்கு பதிலாக 'தமில்' என ட்விட்டரில் பதிவிட்ட குஷ்புவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்தனர்.
உத்தர பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 75ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடக்கும் இந்த நிகழ்வுக்கு ஏற்கனவே தமிழ்நாட்டில் இருந்து பல குழுக்களாக பாரம்பரிய கலைஞர்கள் உத்தரபிரதேசம் சென்றிருந்தனர்.
காசி தமிழ் சங்கமம்:
பழங்காலம் தொட்டே தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் உள்ள தொடர்பை கொண்டாடும் விதமாக இந்த சங்கமம் தொடங்கப்பட்டது. பிரதமர் மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் இந்த கொண்டாட்ட விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணையமைச்சர் எல். முருகன், மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜா, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தமில் என்று பதிவிட்ட குஷ்பு:
நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததற்காக பிரதமர் மோடியை புகழ்ந்து பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் ஒரு ட்விட் செய்திருந்தார். ஆனால், அதில் 'தமிழ்' என பதிவிடுவதற்கு பதிலாக 'தமில்' என அவர் பதிவிட்டால் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கினர்.
Today tamil is known world over and respect for a Tamilian and it’s culture is double folded is because you have taken it globally. We shall always be indebted to you. Not only as your follower, but as a citizen of Tamilnadu. மிக்க நன்றி!
— KhushbuSundar (@khushsundar) November 20, 2022
தமில் வாழ்க! தமில் மொழி வாழ்க!
❤️🙏🏻🙏🏻 https://t.co/13APQnSpal
"இன்று உலகம் முழுவதும் தமிழ் அறியப்படுகிறது. தமிழர்கள் மற்றும் அவர்களின் கலாசாரத்திற்கான மரியாதை இரட்டிப்பாகியுள்ளது. ஏனெனில், நீங்கள் அதை உலகளவில் எடுத்து சென்றுள்ளீர்கள். நாங்கள் எப்போதும் உங்களுக்குக் கடமைப்பட்டிருப்போம். உங்களைப் பின்பற்றுபவராக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் குடிமகனாகவும். மிக்க நன்றி. தமில் வாழ்க! தமில் மொழி வாழ்க!" என குஷ்பு ட்விட் செய்திருந்தார்.
அவரது பதிவிற்கு கீழே நெட்டிசன்கள் அவரை விமர்சித்து பதிவிட்டிருந்தனர். இதையடுத்து, நெட்டிசன்களின் விமர்சனத்திற்கு பதிலளித்த குஷ்பு, "ஒவ்வொரு நாளும் ஒரு கற்றல் அனுபவம்தான். படிப்பதை நிறுத்தவே முடியாது. நீங்கள் கற்றுக் கொள்ளும்போது தவறுகள் நடக்கும். ஆனால், அதுதான் மனித இயல்பு. உங்கள் தவறுகளை பெரிய மனதுடன் ஏற்றுக்கொண்டு அடுத்த முறை சிறப்பாக செயல்படுவேன் என்று உறுதியளிக்கிறேன். நான், கண்டிப்பாக செய்வேன்" என பதிவிட்டுள்ளார்.
Oh oh.. poor Dravidian stock. I have the courage to accept my mistakes. Pls have the spine to show your real faces. A true Tamilian will never hide behind a mask.
— KhushbuSundar (@khushsundar) November 20, 2022
தமிழ் வாழ்க !!
இருப்பினும், தொடர் விமர்சனத்திற்கு உள்ளானதால் கடுப்பான குஷ்பு, "ஐயோ.. ஏழை திராவிட இனமே. என் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் தைரியம் எனக்கு இருக்கிறது. உங்கள் உண்மையான முகங்களைக் காட்ட முதுகெலும்பு வேண்டும். உண்மையான தமிழன் ஒரு போதும் முகமூடிக்கு பின்னால் ஒளிந்து கொள்ள மாட்டான்" என பதிவிட்டுள்ளார்.