வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை - அமைச்சர் பெரிய கருப்பன்
தேவைக்கு ஏற்ப வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு சிறப்பு அங்காடியில் செயல்பட்டு வரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் காய்கறி கடையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது: “தக்காளியின் விலை வெளி சந்தையில் நேற்று 80 ரூபாய்க்கு மேல் இருந்தது. கூட்டுறவு கடைகளில் கிலோ 68 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு அனைத்து பண்ணை பசுமை கூட்டுறவு கடைகளிலும் விற்கப்படுகின்றன. விலை ஏற்றம் படிப்படியாக குறைந்து இயல்பு நிலை திரும்பும். தக்காளி விலை உயர சமீபத்தில் சில இடங்களில் பெய்த ஆலங்கட்டி மழை காரணமாக உள்ளது. அனைத்து காய்கறிகள் விலையும் குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும். விலைவாசி தேர்வு தொடர்ந்து நீடித்தால் தமிழ்நாட்டில் உள்ள நியாய விலை கடைகளில் அனைத்து காய்கறிகளும் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 35 ஆயிரம் நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும். அரசின் தொடர் நடவடிக்கையால் தக்காளி விலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது. தேவைக்கேற்ப வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்” . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக நேற்று தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் அதிகாரியுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முழுவதும் மூன்று நகரும் கடைகள் உட்பட 65 பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி மொத்த மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் நேற்றை விட இன்று 10 ரூபாய் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு சந்தையில் இன்று தக்காளி கிலோ ரூ. 50 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 100 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க
“மக்கள் மேல் பாசம்; 40 ஆண்டுகள் உழைப்பு; கேப்டனுக்கே மக்கள் வாய்ப்பு தரவில்லை” - பிரேமலதா உருக்கம்