TN Rain Alert: மக்களே குடையோட போங்க.. காலை 10 மணிவரை இந்தந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 19 மாவட்டங்களில் மிதமான முதல் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், மயிலாடுதுறை, நாகை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் தூத்துகுடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசாப மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை வலுபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கிய நிலையில் அக்டோபர் மாதம் வரை 49% மழை குறைவாக பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
தென்இந்தியப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மாவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வரும் 12 ஆம் தேதி வரை மிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நேற்றைய தினம் காலை முதல் இரவு வரை மழை இல்லாத நிலை இருந்தது. ஆனால் இன்று அதிகாலை முதல் சேலையூர், மேடவாக்க, பெரும்பாக்கம், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சின்னமலை, அடையாறு, திருவான்மியூர், தொரைப்பாக்கம் ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்து வந்தது. நேற்றைய தினம் மழை இல்லை என்றாலும் இன்று நகரின் அனேக இடங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.