Annamalai: தமிழை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? அண்ணாமலை விளக்கம்
ABP Southern Rising Summit 2025: தமிழ் மொழியை விட சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியது ஏன்? என்று அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

ABP Southern Rising Summit 2025: ஏபிபி குழுமம் நடத்திய ABP Southern Rising Summit நிகழ்ச்சியில் இன்று தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார். அப்போது, அவர் தமிழ் மொழிக்கும், சமஸ்கிருதம் மொழிக்கும் இடையேயான நிதி ஒதுக்கீடு குறித்து பேசினார்.
மொழி நிதி ஒதுக்கீடு:
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு நடந்து வருகிறது. மத்திய அரசு சமஸ்கிருதம் மற்றும் இந்தி தவிர மற்ற மொழிகள் மீது பாரபட்சம் காட்டுவதாக தொடர் விமர்சனங்கள் உள்ளது. குறிப்பாக, தமிழ் மொழி உள்பட தென்னிந்திய மொழிகள் வளர்ச்சிக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
அண்ணாமலை பேசியதாவது, இந்த தலைமுறை பல மொழிகளை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். 5ம் வகுப்பு வரை நான் தமிழ் மொழியில்தான் படித்தேன்.
அதிக நிதி ஏன்?
பிரதமர் எப்போது தமிழ்நாட்டில் பேசினாலும் தமிழில் 3 வரி பேசுகிறார். உதயநிதி ஸ்டாலின் தமிழுக்கு குறைந்த நிதி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். அவர் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு மொழிகளை ஊக்குவிப்பதற்காகவும், விளம்பரப்படுத்துவதற்காகவும் ஒதுக்குகிறது. இது பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது.
சமஸ்கிருதம் மொழிகளுக்காக 18 பல்கலைக்கழகங்கள் உள்ளது. தமிழ் மொழிக்கு ஒரே ஒரு பல்கலைக்கழகம் மட்டுமே உள்ளது. அதுவும் 1981ம் ஆண்டு எம்ஜிஆரால் தொடங்கப்பட்டது. சமஸ்கிருதம் மொழிக்கு 16 பல்கலைக்கழகங்கள் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே தொடங்கப்பட்டது. மோடி ஆட்சியில் 2 சமஸ்கிருத பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட்டது. சமஸ்கிருத பல்கலைக்கழகம் அதிகளவில் உள்ளதால் அதிக பணம் ஒதுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
மற்ற மொழிகளுக்கு நிதி எப்படி?
பிரதமர் மோடி ஆட்சியில் சமஸ்கிருதம் மொழி வளர்ச்சிக்கு ரூபாய் 2 ஆயிரத்து 532 கோடியோ 59 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய 5 மொழிகளுக்கு ரூபாய் 147.56 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளனர்.
ஆண்டுக்கு சராசரியாக ரூபாய் 230.24 கோடி சமஸ்கிருதம் மொழிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 5 மொழிகளுக்கும் சேர்த்து ரூபாய் 13.41 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 சதவீதம் கூட மற்ற மொழிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.
மேலும், இந்தி, உருது மற்றும் சிந்தி ஆகிய மொழிகளுக்கு கடந்த பிரதமர் மோடியின் ஆட்சியில் ரூபாய் 1317.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உருது மொழிக்கு மட்டும் 837.94 கோடி ரூபாயும், இந்திக்கு ரூபாய் 426.99 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.





















