Abp Nadu Exclusive: சாம்சங் போராட்டம் ஏன் ? அரசு செய்ய வேண்டியது என்ன ? - சிஐடியு சௌந்தரராஜன்
ஊரை ஏமாற்றுவதற்காகவும் , மக்களை ஏமாற்றுவதற்காகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அது பொய்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூரில் சிறு குறு தொழில் நிறுவனங்களில் தொடங்கி, சர்வதேச தோல்வி நிறுவனங்கள் வரை செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் பகுதியில் தென்கொரியா நாட்டைச் சேர்ந்த, உலகப் புகழ் பெற்ற சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில், ஏசி, வாஷிங் மெஷின், டி.வி., குளிர்சாதனப்பெட்டி உள்ளிட்டவைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்து வருகின்றனர். தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் ஊதிய உயர்வு வேண்டுமென பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 29ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் 5 கட்ட பேச்சு வார்த்தைகள் நடைபெற்ற நிலையிலும், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
தொழிற்சங்கம் என்பது ஆயுதம்
இது தொடர்பாக சிஐடியு மாநிலத் தலைவா் அ.சௌந்தரராஜன் ஏ.பி.பி நாடு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பிரத்தேக பேட்டியில் , தொழிற்சங்கங்கள் என்பது தொழிலாளர்களுக்கு, அந்தந்த நாட்டின் சட்டப்படி என்ன உரிமைகள் கிடைக்க வேண்டுமோ அதற்காக இருக்கக்கூடிய ஒரு ஆயுதம். ஒரு வேலை அந்த நிர்வாகம் கொடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு செல்லலாம் சட்டத்தை நாடலாம். வேறு எந்த அமைப்பும் தொழிலாளர்களுக்காக செய்து கொடுத்தால் அது நடக்காது. தொழிற்சங்கம் மூலமாகத்தான் அது நடைபெறும். ஆகவே தான் உலகம் முழுவதும் தொழிற்சங்கத்தை வைத்துள்ளார்கள்.
சாம்சங் தொழிற்சங்கம் ஏன் ?
சாம்சங் தொழிற்சாலையில் 16 ஆண்டுகளாக சங்கம் இல்லாததால், தொடர்ந்து நிர்வாகம் தொழிலாளர்களை ஏமாற்றுகிறது. வஞ்சிக்கிறது, வேலையை கூடுதலாக வாங்குகிறார்கள், உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கொடுப்பதில்லை. இதனால்தான் சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் சங்கம் வைத்தார்கள். நிர்வாகத்திற்கு இங்கு சங்கம் தொடங்கிவிட்டால், சட்டத்தை அமல்படுத்த வேண்டி இருக்கும், இஷ்டத்திற்கும் வேலை வாங்க முடியாது, தொழிலாளர்களை அடிமையாக நடத்த முடியாது, லாபத்தை வரைமுறை இல்லாமல் பெருக்கிக் கொள்ள முடியாது. இதனால்தான் சங்கம் வேண்டாம் என சாம்சங் நிர்வாகம் இணைகிறது.
இது ஒரு வர்க்க போராட்டம் ?
தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என தொழிலாளர்களும், லாபத்தை பெருக்கிக் கொள்ள நினைக்கும் நிர்வாகம் இருப்பதால்தான் தொழிலாளர்கள் சங்கம் வேண்டும் என்கிறார்கள், நிர்வாகத்தினர் சங்கம் வேண்டாம் என்கிறார்கள். இது ஒரு வர்க்க போராட்டம் இந்த வர்க்க போராட்டம் நிற்காது. முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடு இருக்கும் வரை இந்த போராட்டம் நிற்காது. இதை அரசு மற்றும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். சாம்சங் ஊழியர்கள் விஷயத்தில் பிரதான கோரிக்கை என்பது சங்கம். பிரதான கோரிக்கையாக சங்கம், கூட்டு பேர உரிமை, தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் அது அரசின் கடமை.
தமிழ்நாடு அரசு கடமையை நிறைவேற்ற வேண்டும்
சாம்சங் நிறுவனம் கூடுதலாக, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதாக கூறுவது பொய். ஏதோ ஒரு நிறுவனத்தை வைத்து அவர்கள் கூடுதலாக சம்பளம் கொடுக்கிறோம் எனக் கூறினார்கள் என்றால், அந்த நிறுவனம் என்ன லாபம் சம்பாதிக்கிறது, இந்த நிறுவனம் என்ன என்ன சம்பாதிக்கிறது என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். லாபத்தின் அடிப்படையில் தான் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும். இதே நிறுவனம் சவுத் கொரியாவில் செயல்பட்டு வருகிறது அங்கு என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் என்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். ஊரை ஏமாற்றுவதற்காகவும் , மக்களை ஏமாற்றுவதற்காகவும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அது பொய். தமிழ்நாடு அரசு சங்க உரிமையை தொழிலாளர்களுக்கு பெற்றுத் தர வேண்டிய கடமையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.