Aavin : அதிரடி திட்டம்.. நைட்ரஜன், புது பதப்படுத்தல்.. ஆவினில் வருகிறது புதிய முறை பேக்கேஜ்…
தற்போது இவை, பாலிதீன் கவர், பிளாஸ்டிக் டப்பா, அட்டை பெட்டி உள்ளிட்டவற்றில் அடைத்து விற்கப்படுகின்றன. இதனால் குறைந்த காலத்திலேயே காலாவதி ஆகி விடுவதால், ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.
ஆவின் பால் உப பொருட்களை புதிய வடிவில், 'பேக்கிங்' செய்து வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன, விரைவில் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
விரைவாக காலாவதி
ஆவின் நிறுவனம் வாயிலாக பால் மட்டுமின்றி, வெண்ணெய், நெய், கோவா, மைசூர்பாகு, பால் கேக், பால் பேடா, பிஸ்கட் உள்ளிட்ட, 84 வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன. தற்போது இவை, பாலிதீன் கவர், பிளாஸ்டிக் டப்பா, அட்டை பெட்டி உள்ளிட்டவற்றில் அடைத்து விற்கப்படுகின்றன. இப்படி பேக்கிங் செய்தால் அவற்றுக்கான காலாவதி நாள் குறைவு. இதனால் குறைந்த காலத்திலேயே காலாவதி ஆகி விடுவதால், ஆவின் நிறுவனத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி அவற்றின் மூலமாக தரமான தயாரிப்பை கொண்டு சென்று சேர்க்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
நைட்ரஜன் வாயு
இந்த பிரச்சனையை சரி செய்வதற்காக வெகு நாட்களாகவே திட்டமிட்டு வந்தது ஆவின். தற்போது அதற்கு ஒரு வழியை கண்டறிந்து செயல்படுத்த இருக்கிறது. 20 நாட்கள் முதல் ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும் வகையில், நைட்ரஜன் காஸ் பயன்படுத்தி, அவற்றை புதிய வடிவில் 'பேக்' செய்து விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வதன் வாயிலாக, பொருட்களின் தரம் பாதிக்கப்படாது என ஆவின் அதிகாரிகள் கருதுகின்றனர்.
விரைவில் அமலுக்கு வரும்
விரைவில், புதிய வடிவில் 'பேக்' செய்யப்பட்ட ஆவின் பால் உப பொருட்கள் விற்பனைக்கு வர உள்ளன. இதேபோல, 10 வகையான புதிய பால் உப பொருட்களை தயாரித்து விற்பனை செய்யவும் ஏற்பாடு நடந்து வருகிறது.
நீதிமன்ற அறிவுறுத்தல்
ஆவின் பாலை பிளாஸ்டிக் கவருக்கு பதிலாக கண்ணாடி பாட்டில்களில் தருவதற்கு ஆலோசிக்க வேண்டும் என, பிளாஸ்டிக் தடையை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் சென்ற மாதம் அறிவுறுத்தி இருந்தது. மருந்து, பால் அடைக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதித்தால்தான் மாசடைவது தடுக்கப்படும் என்றும், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக துணி, சணல், பாக்குமட்டை போன்ற மாற்று பொருட்களை ஊக்குவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றம் பிளாஸ்டிக்கை ஒழிக்கிறதா என்பது குறித்து இதுவரை தகவல்கள் இல்லை, ஆனால் அதற்கான முயற்சியும் இதில் இருக்கும் என்று தெரிகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்