Aadi Perukku 2023:நாளை ஆடிப்பெருக்கு: தக்காளிக்கு போட்டியாக மல்லி, முல்லை! விலை இருமடங்காக உயர்வு...இதுதான் பட்டியல்...!
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை இன்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
Aadi Perukku 2023: ஆடிப்பெருக்கை முன்னிட்டு மலர் சந்தையில் பூக்களின் விலை வழக்கத்தை விட இன்று அதிகமாக விற்கப்பட்டு வருகிறது.
ஆடிப்பெருக்கு:
ஆடி மாதம் என்றாலே அத்தனை சிறப்புகள் நிறைந்தது. ஆடி மாதத்தில் வரும் சிறப்பு வாய்ந்த நாட்களுக்கு எல்லாம் மகுடமாக இருப்பது ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கு என்றால் ஆடி மாதம் 18-ந் தேதியை குறிக்கும். ஆடி மாதம் 18ம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை குறிக்கும் ஒரு பண்டிகையே ஆடிப்பெருக்கு ஆகும். ஆடிப்பெருக்கை ஆடி 18, பதினெட்டாம் பெருக்கு, ஆடி நோம்பி என்றும் மக்கள் அழைப்பார்கள்.
காவிரி ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடி வரும் இந்த நாளில் உழவர்கள் விதை விதைத்து புதிய பருவத்திற்கான விவசாயத்தை தொடங்குவார்கள். இதையே ஆடிப்பட்டம் தேடி விதை என்றும் நமது முன்னோர்கள் கூறினார்கள். அந்த நாளில்தான் நெல், கரும்பு போன்ற பயிர்கள் விதை, விதைப்பதற்கான பணிகள் தொடங்குவார்கள். அப்போதுதான், தை மாதம் அறுவடை செய்ய ஏதுவாக இருக்கும்.
களை கட்டும் கொண்டாட்டம்:
தமிழ்நாட்டின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஆடிப்பெருக்கு உள்ளது. ஆடிப்பெருக்கு பண்டிகையை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக கொண்டாடினாலும், காவிரி கரைபுரண்டு ஓடும் மேட்டூர் அணை, பவானி கூடுதுறை, ஈரோடு, பரமத்தி, குளித்தலை. திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய பகுதிகளில் வெகு சிறப்பாக மக்கள் கொண்டாடுவார்கள்.
பூக்களின் விலை உயர்வு:
இந்நிலையில், நாளை ஆடிப்பெருக்கு என்பதால் மலர் சந்தையில் பூக்களின் விலை அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை, திண்டுக்கல், தோவாளை, தூத்துக்குடி ஆகிய இடங்களின் மலர் சந்தையில் மல்லிகை, முல்லை, பிச்சிப்பூ ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் மல்லிகைப் பூ கிலோ ரூ.800க்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல முல்லை பூ கிலோ ரூ.7,600, பிச்சிப்பூ கிலோ ரூ.700, கனகாம்பரம் கிலோ ரூ.500, செண்டு கிலோ ரூ.100, ரோஸ் கிலோ ரூ.250, செவ்வந்தி ரூ.280, அரளிப்பூ ரூ.200, மரிக்கொழுந்து ரூ.100, வாடாமல்லி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஆண்டிப்பட்டி மலர் சந்தையில், மல்லிகைப்பூ கிலோ ரூ.700க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதேபோன்று, தக்காளி விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், இன்று தக்காளி விலை 10 ரூபாய் குறைந்துள்ளது. மொத்த விற்பனையில் 160 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 180 ரூபாய்க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Vegetable Price: ரூ. 10 குறைந்த தக்காளி விலை.. மற்ற காய்கறிகளின் விலை? இன்றைய விலை பட்டியல் இதோ!