Aadi Amavasai 2023: ஆடி அமாவாசை...முன்னோர்களுக்கு தர்ப்பணம்...சுகாதாரமற்ற முறையில் கரூர் வாங்கல் பகுதி
ஆடி அமாவாசை அன்று ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி கொடுப்பதால் அவர்கள் ஆசி கிடைக்கும் என்பது முன்னோர்களின் ஐதீகம்.
கரூரில் மாயனூர்,வாங்கல், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் செய்தனர். அங்குள்ள கழிவறை மற்றும் உடை மாற்றும் அறையை பயன்படுத்த முடியாமல் கிடப்பதால் சரி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தை, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் வரும் அமாவாசை தினங்களில் பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு நீர்நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். இதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, ஆடி அமாவாசையான இன்று காவிரி ஆற்றுக்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
கரூர் மாவட்ட காவிரி ஆற்றங்கரை ஓரத்தில் மாயனூர், வாங்கல், குளித்தலை உள்ளிட்ட ஆற்றங்கரையில் பொதுமக்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அப்போது அங்கு வந்த பலரும் தங்களது மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயரை கூறி தர்ப்பணம் செய்தனர். அதன் பின்பு அவர்கள் பூஜை செய்து பிண்டங்களை காவிரி ஆற்றில் விட்டு முன்னோர்களை வணங்கி சென்றனர்.
பின்னர் வீடுகளுக்கு வந்ததும் முன்னோர்களின் படத்தை வைத்து அவர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழங்கள் உள்ளிட்டவற்றை படையல் இட்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். மேலும் வாங்கல் காவிரி ஆற்றில் அமைந்துள்ள உடை மாற்றும் அறை மற்றும் கழிவறைகளை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனை சரி செய்து தர வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் காவிரி பாயும் வேலாயுதம்பாளையம், வாங்கல், மாயனூர் உள்ளிட்ட இடங்களில் காலை முதல் குடும்பம் குடும்பமாக தர்ப்பணம் செய்ய வந்திருந்த நிலையில் வழக்கத்தை விட காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று ஏராளமான பொதுமக்கள் அவர்களுடைய குலதெய்வ வழிபாட்டை குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.