Arputhammal: ஒரு தாயின் 31 ஆண்டுகால பாசப்போராட்டம்! அற்புதங்களை செய்துகாட்டிய அற்புதம்மாள்!
ரப்பர் செருப்பு தேய அற்புதம்மாள் நடந்த காலடிகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது.
பேரறிவாளன்.... தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவே அடிக்கடி உச்சரிக்கும் பெயர். காவல்துறை, நீதித்துறை, பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரிடமும் புழங்கிய ஒரு பிரபல பெயர். கிட்டத்தட்ட 31 ஆண்டுகாலமாக பல்வேறு கேள்விகளையும், பதில்களையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் சிறைவாசத்தின் கதவுகள் இன்று நிரந்தரமாக திறக்கப்பட்டுள்ளது. 31 ஆண்டுகால சிறைத்தண்டனையில் அறைக்குள் அடைக்கப்பட்டது பேரறிவாளனாக இருந்தாலும் மனச்சிறைக்குள் அடைந்துகிடந்தவர் அவரது தாயார் அற்புதம்மாள். பெயருக்கு ஏற்பவே அற்புதங்களை செய்தவர் அற்புதம் அம்மாள்.
களைத்துபோன முகமும்,தோள்பட்டையில் ஒரு பையும், நரைத்த முடியும், ஒரு கண்ணாடியுமாக என்றுமே கண்ணில் ஒரு வித ஏக்கத்துடன் ரப்பர் செருப்பு தேய அற்புதம்மாள் நடந்த காலடிகளை எண்ணிக்கையில் அடக்க முடியாது. மகனை கைது செய்துவிட்டார்கள் என்ற செய்தி கேட்டு அற்புதம்மாள் ஓடத்தொடங்கியது 1991ம் ஆண்டு. 31 ஆண்டுகளுக்கு முன்பு ஓடத்தொடங்கிய அந்த ஓட்டத்துக்கு இன்றுதான் ஓய்வு கிடைத்திருக்கிறது.
என் மகன் ஒரு நிரபராதி என்ற வார்த்தையை கோடி முறை உச்சரித்திருப்பார் அற்புதம்மாள். எத்தனை எத்தனை அரசியல் தலைவர்கள், எத்தனை எத்தனை கோரிக்கைகள், கடிதங்கள், பத்திரிகையாளர் சந்திப்புகள் என இந்த அற்புதம்மாள் கடந்த வந்த இந்த 31 வருடங்கள் காலத்தால் கொண்டாடப்பட வேண்டியவை. 1991ம் ஆண்டு மனதில் இருந்த அதே உறுதியை 2022 வரையுமே குறையாமல் வைத்திருந்தார் இந்த பாசத்தாய். அவரது நம்பிக்கை தீ நாளுக்குநாள் கொழுந்துவிட்டு எரிய எரிய அற்புதம்மாளின் தீப்பொறிக்கு எண்ணெய் ஊற்றி கைகொடுத்தது தமிழ் சமூகம்.
பரோலுக்கும், ஜாமினுக்குமே நடையாய் நடந்த இந்த இரும்புத்தாயின் கைகளில் இன்று அவரது மகனின் கரங்களை நிரந்தமாக கைகோக்க வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். பேரறிவாளனின் வழக்கு 31 ஆண்டுகால சட்ட போராட்டம் மட்டுமே இல்லை. இந்த 31 ஆண்டுகளுக்கு பின்னால் ஒரு தாயின் உணர்வு போராட்டமும், ஒரு தாயின் பாசப் போராட்டமும், ஒரு தாயின் மனவுறுதியும் அடங்கி இருக்கிறது.
நான் ஒரு அப்பாவி பையனின் தாய். 28 வருடங்களுக்கு முன் என்னிடமிருந்து பறிக்கப்பட்டான். அப்போது அவருக்கு 19 வயது. அன்றுமுதல் நான் அவர் பின்னால் ஓட ஆரம்பித்தேன், இன்னும் ஓடுகிறேன் என ட்விட்டரில் பயோ வைத்துள்ள அற்புதம்மாள் இனியாவது அதை மாற்றிக்கொள்ளலாம். இனி மகன் பின்னால் அவர் ஓட வேண்டாம். கைகோத்து நடக்கலாம். இனி எப்போதும் சிறைவாசமில்லை. தாயின் மடிவாசம்தான் என்பதே பேரறிவாளனுக்கும் அவரது விடுதலையை கொண்டாடும் தமிழ் சமூகத்துக்கும் நற்செய்தி.